கட்டுக்கட்டாக கரன்சி.. கல்லூரி மாணவன் கடத்தல்.. - சினிமாவை மிஞ்சிய கிரைம் சம்பவம்! | old 500 and 1000 rupees currency seized by police

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (17/07/2017)

கடைசி தொடர்பு:21:22 (17/07/2017)

கட்டுக்கட்டாக கரன்சி.. கல்லூரி மாணவன் கடத்தல்.. - சினிமாவை மிஞ்சிய கிரைம் சம்பவம்!

நெல்லை மாவட்டத்தில் 3 கோடி ரூபாய் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளை மாற்ற முயன்ற கும்பல் பிடிபட்டது. அந்தப் பணத்தை மாற்றிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவனைக் கடத்திய கும்பலும் பிடிபட்டுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் பரபரப்பான இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை போலீஸார் பிடித்துள்ளனர். 

 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர், பால்ராஜ். காற்றாலை நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அத்துடன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம் 3 கோடி ரூபாய்க்கு செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. அதை மாற்ற முயற்சி செய்துவந்திருக்கிறார். இதற்காக பல்வேறு புரோக்கர்களையும் தொடர்புகொண்டு எப்படியாவது அந்தப் பணத்தை மாற்ற தீவிரம் காட்டி வந்திருக்கிறார்.  

இந்நிலையில், நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தர், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய புரோக்கர்களுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இருவரும் 3 கோடி ரூபாய் செல்லாத பணத்தை நல்ல கரன்சியாக மாற்றித் தருவதாக தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக தங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கமிஷன் எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். அதற்கு சம்மதித்த பால்ராஜ், தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் இருந்துள்ளார்..

இந்நிலையில், பால்ராஜை தொடர்புகொண்ட புரோக்கர்களான சுந்தர், ஜெயபால் ஆகியோர், உடனே பணத்தை எடுத்துவந்தால் நெல்லையை அடுத்த கரையிருப்பு சிதம்பரநகரில் உள்ள ஒருவரின் மூலமாக பணத்தை மாற்றிவிடலாம் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி தனது நண்பர்கள் மூவருடன் பால்ராஜ் வந்துள்ளார். அவர் கொண்டு வந்த 3 சூட்கேஸ்களில் 3 கோடி ரூபாய் செல்லாத பணம் இருந்துள்ளது. அவர்களை அழைத்துக் கொண்டு கரையிருப்புக்குச் சென்ற நிலையில், ஜெயபால் மட்டும் காரில் இருந்து இறங்கியுள்ளார். மற்றவர்கள் ஊருக்குள் காரில் சென்றுள்ளனர். 

அப்போது அங்கு வந்த மற்றொரு கும்பல் காரில் இருந்தவர்களை அடித்து இறக்கிவிட்டு, அவர்கள் கொண்டு வந்த பணத்தை மட்டுமல்லாமல் காரில் இருந்த 5 பேரும் அணிந்திருந்த செயின், வாட்ச் போன்றவற்றையும் பறித்துச் சென்றனர். பதறிய அவர்கள், தங்களை அழைத்து வந்த ஜெயபாலைத் தேடி இருக்கிறார்கள். அவர் அந்த இடத்தில் இல்லை. அத்துடன், அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அதனால், அவரது ஏற்பாட்டிலேயே இந்த கொள்ளை நடந்ததை அறிந்துகொண்டனர்.

அதனால், ஆத்திரம் அடைந்த 5 பேரும் நேராக மேலப்பாலையத்தில் உள்ள ஜெயபால் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கும் இல்லை. அதனால் கோபம் அடைந்த அவர்கள், வீட்டில் இருந்த ஜெயபாலின் மகன் சுரேஷ் என்பவரைக் காரில் கடத்திச் சென்றனர். சுரேஷ், பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தனது மகன் கடத்தப்பட்டதைக்  கேள்விப்பட்ட ஜெயபால் 5 பேரிடமும் தொடர்புகொண்டு மகனை விட்டுவிடுமாறு கெஞ்சினார். அவர்கள், பணத்தைக் கொடுத்தால் அவரது மகனை விடுவிப்பதாகக் கூறினர்.

இந்நிலையில், ஜெயபால் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தனது மகன் கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து மாணவன் சுரேஷை விடுவிக்க அந்தக் கும்பலைச் சேர்ந்த ஜான்செல்வநாயகம், தேவபிச்சை, அமர்நாத், பீட்டர் சாம்குமார், மில்டன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்லாத பணத்தை மாற்ற நடந்த முயற்சி பற்றி தெரியவந்ததால், இந்த வழக்கு நெல்லை டவுன் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தனது பணத்தை மோசடியாக பறித்துச் சென்றதாக பால்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் 12 பேரை போலீஸார் கைது செய்தனர். ஜெயபால், கணேசன், சுந்தர், ராஜேஸ்வரன், ராம்குமார், மைதீன்ராஜா ஆகியோர் நேற்று கைது செய்யபப்பட்ட நிலையில், இந்த சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்ட கொம்பையா, முருகன், வீரபத்திரன், சங்கரபாண்டியன், மாரிமுத்து, ரெங்கசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். 


 


[X] Close

[X] Close