வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (17/07/2017)

கடைசி தொடர்பு:21:32 (17/07/2017)

'கலெக்டர் சார்... எங்க ஊருக்கு டாஸ்மாக் வேண்டும்': தங்க தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமம்!


டாஸ்மாக்கை எதிர்த்து கடையை அடித்து நொறுக்கி வருகிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்கா, நடுக்காவேரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை வேண்டுமென மனுநீதி நாளான இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை வாங்கிப்பார்த்த கலெக்டர் திரும்பத் திரும்ப படித்துப்பார்த்தார். சற்று அதிர்ச்சி அடைந்தவர், சரி பார்க்கலாம் என்று பதிலளித்தார்.

இதுகுறித்து நடுக்காவேரியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பேசினோம், எங்கள் ஊரின் மையப்பகுதியில் டாஸ்மாக்கடை இருந்துச்சு, ஆண்கள், இளைஞர்கள் குடிச்சிட்டு ரோட்டிலேயே நின்னு அலம்பல் பண்ணிக்கிட்டு இருந்தார்கள். நாங்க போவும்போதும், வரும்போதும் கிண்டல் செய்வார்கள். குடிச்சிட்டு வந்து தினம், தினம் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடையை அகற்றச் சொல்லி போராடி டாஸ்மாக்கடையை அகற்றினோம். ஆனா இப்ப அதைவிட கள்ளச்சாராயம் பெருகிடுச்சு, எப்ப கள்ளச்சாராயம் விஷச்சாராயமாக மாறி செத்துடுவானுங்கனு அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகிறோம். காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்ல, அதனால்தான் மீண்டும் டாஸ்மாக் கடை வேண்டுமென்று கேட்கிறோம் என்றார். 


நடுக்காவேரியைச் சேர்ந்த ரவிச்சந்திரனிடம் பேசினோம், "டாஸ்மாக் கடையை அகற்றிய பிறகு, சுற்றளவு 5 கி.மீ டாஸ்மாக் கடைகளே இல்லை. ஆனால், இப்போது கள்ளச்சாராயம் வீட்டுக்கு வீடு வைத்து விற்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பாண்டிச்சேரியிலிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வரும் மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது.  காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை. கள்ளச்சாராயம் ரூ.60க்கு விற்கிறார்கள். இதனால், விவசாயக் கூலித்தொழிலாளி வாழ்கின்ற எங்கள் பகுதியில் தினம் தினம் வேலை செய்துவிட்டு வாங்கும் கூலித்தொகையில் கள்ளச்சாரயத்தை வாங்கி குடித்தே தீர்த்து விடுகிறார்கள். வீட்டுக்குச் சம்பளத்தை கொண்டுபோய் சேர்ப்பதில்லை. இதனால், பெரும்பாலான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் சூழல் நிலவுகிறது. ஒரு சாதாரண விவசாயக்கூலித் தொழிலாளி வாங்கும் சம்பளத்தை வைத்துக்கொண்டு தக்காளி, வெங்காயம்கூட வாங்க முடியாது. எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை இருக்கும்போது குறிப்பிட்ட மணி நேரத்தில்தான் குடித்தார்கள். இப்போது 24 மணி நேரமும் குடிக்கிறார்கள். ஏனென்றால் பாக்கெட் சாராயம் எந்த நேரத்திலும் கிடைக்கிறது. காவல்துறை கள்ளச்சாராயத்தை ஒழித்தால் நாங்கள் எதற்கு மீண்டும் டாஸ்மாக் கடை வேண்டுமென கேட்டுக்கிறோம்" என்றார் விரக்தியோடு.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க