Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தவறுகளைச் சரிசெய்யவே தண்டனைகள்; குழந்தைகளைக் காயப்படுத்த அல்ல! #GoodParenting

குழந்தை

குழந்தைகள் என்பவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, கேட்டு, விவரம் அறிந்துகொள்கிறார்கள். மெள்ள, மெள்ள ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டு, பழகி இந்தச் சமூகத்துக்கான மனிதராக வளர்கிறார்கள். அப்படிப் பழகும் தருணங்களில் நிறையத் தவறுகள் செய்வதாகப் பெற்றோர் குறைப்பட்டுக்கொள்வர். அது பெற்றோருக்குத்தான் தவறு; குழந்தைகளுக்குப் பயிற்சிதான். எனவே பயிற்சிக்காலத்தில் இருக்கும் ஒருவராகவே குழந்தைகளைக் கருத வேண்டும். 

எத்தனை முறை சொன்னாலும் தவறுதலாகவே செய்கிறார்கள் எனக் குறைப்பட்டுக்கொள்ளும் பெற்றோரும் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுக்கொள்ளும் தன்மை மாறுபடும். அதை முதலில் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் கற்றலைத் தொடர்ந்தால் குழந்தைகளுக்கும் கற்றுக்கொள்வது எளிதாகிவிடும். இது படிப்பதற்கு மட்டுமல்ல வீட்டு வேலை செய்வது, விருந்தினர்களோடு பழகுதல், வெளியே செல்லுகையில் நடந்துகொள்வது என அனைத்துக்கும் பொருந்தும். 

பெற்றோர் எவ்வளவு கவனத்துடன் நடந்துகொண்டாலும் குழந்தைகள் சில தவறுகளைச் செய்வதைத் தவிர்க்க முடியாது. அதற்காக சிறுசிறு தண்டனைகள் கொடுக்கலாம் எனத் தாங்களாகவே ஒரு முடிவுக்குச் சில பெற்றோர் வந்துவிடுகின்றனர். அவர்களின் கவனத்துக்குச் சில விஷயங்கள்.

முதலில், நீங்கள் கொடுக்கும் தண்டனைகள் தேவைதானா என்பதைப் பல முறை யோசியுங்கள். குழந்தைகள் செய்த தவறைத் திரும்பவும் செய்யக்கூடாது என்பதாகவே இந்தத் தண்டனைகள் எனச் சொல்வீர்கள் என்றால், அந்தத் தவறைத் திருத்துவதற்கு மட்டுமான தண்டனைகளைக் கொடுங்கள். முக்கியமாகக் குழந்தைகளை அடிப்பது எனும் தண்டனையைத் தரவே தராதீர்கள்.

வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிடுதல் அல்லது முறையாகச் செய்யாத குழந்தைக்கு ஒரு வாரம் டிவி, விளையாட்டு எதுவும் கிடையாது எனத் தண்டனையைக் கொடுக்காதீர்கள். செய்யும் தவறுக்கு ஏற்ற வகையில் சிறுசிறு தண்டனைகள் போதும். 

குழந்தை வளர்ப்பு

தவறுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்க முயலுங்கள். உதாரணமாக, தன் தம்பியை அடித்தோ, திட்டியோ அழ வைத்துவிட்டால், இருவர் சேர்ந்து செய்யும் வேலை ஏதேனும் இருந்தால், அதைத் தம்பியுடன் சேர்ந்து செய்ய வையுங்கள். 

ஒரு விதியை மீறினால், அதை மறைக்காமல் ஒத்துக்கொள்ளப் பழக்குங்கள். அப்போதே அந்த விதியை மீறியமைக்குச் சிறு தண்டனை அளித்து, மீண்டும் அவ்வாறு நிகழாமல் பார்த்துகொள்ள முடியும். விதி மீறலை குழந்தை ஒத்துக்கொண்டால் அதற்காகவே தண்டனை ஏதும் கொடுக்காமல் விடலாம். 

சில தண்டனைகளை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ளலாம். அதில் பெற்றோருக்கான தண்டனைகளையும் கணக்கில் கொள்ளுங்கள். ஏதேனும் விதி மீறலைப் பெற்றோர் செய்யும்பட்சத்தில் தாமே தண்டனையை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் குழந்தைகளுக்கு மனதில் அது ஆழமாகப் பதியும்.

குழந்தைகளை அடிப்பது என்பது அந்தத் தவறைத் திருத்துவதற்கு உதவாது. ஐந்து நிமிடம்தானே வலிக்கும் என்பதாக அதை எளிதாக எடுத்துகொள்ளக்கூடும். அடிக்கும் பெற்றோரை சில குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. எனவே அடிப்பது என்பதை மறந்தும் பயன்படுத்தாதீர்கள். 

இவை தவிர முக்கியமாகப் பெற்றோர் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. குழந்தைகள் ஏதேனும் தவறு செய்கிற நிலையில், அதற்கான காரணத்தைத் தேட வேண்டியது அவசியம். பள்ளியில் ஏதேனும் ஒரு வகுப்பைப் புறக்கணித்து வெளியே சுற்றுகிறது எனில், அதைக் குழந்தையின் தவறாக மட்டுமே பார்க்காமல், மற்ற வகுப்புகளுக்குச் செல்லும் அவர்கள் ஏன் ஒரு வகுப்பைப் புறக்கணிக்கிறார்கள் என்பதாகப் பார்ப்பதுதான் சிறந்தது. 

தண்டனைகள் அன்பின் மொழியாக வர வேண்டும், அதிகாரத்தின் வெளிப்பாடாக இருக்கக்கூடாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close