வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (18/07/2017)

கடைசி தொடர்பு:12:10 (18/07/2017)

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் அடுத்த அதிரடி.. பல்சர் சுனில் மற்றொரு நடிகையைக் கடத்தியது அம்பலம்!

மலையாள நடிகையைக் கடத்தி பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் கேரள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் மீது, ஏற்கெனவே மற்றொரு நடிகையைக் கடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் நடிகர்  திலீப்புக்குத் தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த முன்னணி நடிகையைக் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கொச்சி நகரில் வைத்து ஒரு கும்பல் காரில் கடத்தி அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக அந்த நடிகை துணிச்சலுடன் போலீஸில் புகார் செய்தார். தீவிர விசாரணை நடத்திய கேரள போலீஸார், முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் என்பவரைக் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், இந்தச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட நடிகர் திலீப்பை கடந்த 10-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். கேரளாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகர் திலீப், பல்சர் சுனில் ஆகியோருக்குத் தொடர்பு உடைய திரையுலகப் பிரபலங்களிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அதன்படி திரைப்படத் தயாரிப்பாளரான ஜானி சர்க்காரியா என்பவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். சில வருடங்களுக்கு முன்பு பல்சர் சுனில் அவரிடம் டிரைவராக வேலை செய்து வந்ததால், ஜானி சர்க்காரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது , அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்சர் சுனில் கடந்த 2011-ல் இதே போல் மற்றொரு நடிகையைக் கடத்திச் சென்று துன்புறுத்திய சம்பவம் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸாரிடம் தயாரிப்பாளரான ஜானி சர்க்காரியா அளித்த வாக்குமூலத்தில், ’’கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பல்சர் சுனில் ஜானி என்னிடம் வேலை செய்தார். ஒரு படத்தை தயாரித்த நான், அந்தப் படத்தின் நாயகியுடன் அவரது தோழி ஒருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். ஒரு நாள் அவரது தோழி வரவில்லை. அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனியாக இருந்த அந்த நடிகையை பல்சர் சுனில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி விட்டார்.

இந்த விவகாரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும் பிரச்னையானது. உடனடியாக நான் பல்சர் சுனிலை வேலையில் இருந்து நீக்கி விட்டேன். அந்த நடிகையிடம் போலீஸில் புகார் கொடுக்கச் சொன்னேன். ஆனால், அவர் பயந்து போய் இருந்ததால் புகார் கொடுக்க மறுத்து விட்டார். அத்துடன் அந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது” எனத் தெரிவித்து உள்ளார். தயாரிப்பாளர் ஜானி சர்க்காரியாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீஸார், அதன் அடிப்படையில் பல்சர் சுனில் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சிறையில் இருக்கும் பல்சர் சுனிலை இந்த வழக்கிலும் இன்று முறைப்படி கைது செய்ய உள்ளனர். 

அத்துடன், 2011-ல் நடிகை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்சர் சுனிலிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே நடந்த கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப்புக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பல்சர் சுனில் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள் காரணமாக நடிகர் திலீப் ஜாமீனில் வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகை கடத்தப்பட்ட வழக்கில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த நகர்வுகள் கேரள திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது என்பதே உண்மை.