வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (18/07/2017)

கடைசி தொடர்பு:13:10 (18/07/2017)

அக்னி தீர்த்தக் கடலில் அரசு அறிவிக்கை நகலைக் கிழித்து எறியும் போராட்டம்!

நாட்டுப் படகு மீனவர்களுக்கு எதிராக தமிழக அரசு  கொண்டுவந்துள்ள மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அரசு அறிவிக்கை நகலைக் கிழித்து எறியும் போராட்டம் நடத்தினர்.

விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் விசைப்படகின் குதிரை திறனை 150-ல் இருந்து 240 ஆக உயர்த்துவதன் மூலம் கடல் வளத்தை அழிக்கத் துணை போவது, மரபு வழியான வலைகளையும், தூண்டில்களையும் பயன்படுத்தி மீன்பிடித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் இனி 3 கடல் மைல்களுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க வகை செய்யப்பட்டிருப்பது, அனைத்து குழந்தைத் தொழிலாளர்களுக்கும் 14 வயதை வரம்பாக வைத்துள்ள நிலையில், மீன் பிடித் தொழிலுக்கு மட்டும் 18 வயதாக நிர்ணயம் செய்திருப்பது, நாட்டுப்படகு மீனவர்களின் படகுகளைப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள், மீனவ மக்கள் குடிசைத் தொழிலாக ஈடுபட்டுள்ள வலை பின்னுதலை அழிக்கும் வகையிலும், விதிகளை மீறும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டிருப்பது, மீன்பிடி துறைமுகங்களைப் பராமரிக்க அதனை பயன்படுத்துவோரிடம் இருந்து வரி வசூல் என்ற பெயரில் தண்டம் வசூலிக்க அனுமதித்தல் போன்ற புதிய திருத்தங்களால் பாரம்பர்யமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் நாட்டுப்படகு மீனவர்களை கடலோரப் பகுதிகளில் இருந்து விரட்டி அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் புதிய மீன் பிடி ஒழுங்கு முறைச் சட்ட திருத்தத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரத்தில் மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் அரசு அறிவிக்கையைக் கிழித்து கடலில் வீசும் போராட்டத்தை நடத்தினர். அக்னி தீர்த்த கடலில் நடந்த இந்தப் போராட்டத்தில் மீனவர்கள் பலர் பங்கேற்றனர்.