வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (18/07/2017)

கடைசி தொடர்பு:12:07 (19/07/2017)

இதுவரை நீங்கள் அறிந்திராத திருநங்கைகளின் மாதா பூஜை!

திருநங்கைகளின் உலகம் மிக வித்தியாசமானது. சமூகத்தின் பார்வையில் கெட்ட வார்த்தைகள் பேசுபவர்களாகவும், கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும் பார்க்கப்படுகிற திருநங்கைகளுக்கு தனித்துவமான பண்பாடும் வழிபாடுகளும் சடங்குகளும் இருக்கின்றன. மூத்த திருநங்கைகளுக்கு மரியாதை கொடுப்பதில்... உபசரிப்பதில்... உணர்வுப்பூர்வமாக வழிபடுவதில்... எல்லாவற்றிலும் அவர்களிடம் கட்டுப்பாடும் கண்ணியமும் நிறைந்திருக்கும். அவற்றில் ஒன்று மாதா பூஜை!

தன்னை ஒரு திருநங்கையாக உணரத் தொடங்கிய பிறகு, வீட்டோடு ஒட்ட முடியாமல், தங்களை நாடி வரும் இளம் திருநங்கைகளை மகளாக ஏற்றுக்கொள்வார்கள் மூத்த திருநங்கைகள். அந்த நிமிடத்தில் இருந்து அந்த இளம் திருநங்கையின் நல்லது, கெட்டது அனைத்துக்கும் பொறுப்பேற்றுக்கொள்வார்கள். அக்கா, தங்கை, சித்தி, பெரியம்மா, பாட்டி, மாமியார் என்று தங்களுக்குள்ளாகவே உறவுகளை வளர்த்துக்கொண்டு மிகப் பெரிய உறவுக்கொடியோடு வாழ்ந்துவருகிறார்கள் திருநங்கைகள். அவர்களின் வழிபாடும் சடங்குகளும் மிக வித்தியாசமானவை.

திருநங்கை

அது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் திருநங்கை பாரதி கண்ணம்மா...

"திருநங்கைகளோட வழிபாடுனு சொன்னவுடனேயே எல்லாருக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில்தான் நினைவுக்கு வரும். அது நம்ம மரபோடு தொடர்புடைய ஒரு விஷயம். திருநங்கைகளோட குலதெய்வம்னு பார்த்தா, அது போத்ராஜ் மாதாதான். குஜராத் மாநிலம், அகமதாபாத்துல இருந்து 110 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு போத்ராஜுங்கிற கிராமம். அங்கே இந்த மாதாவோட கோயில் இருக்கு.

மாதா பூஜை

உடலளவுலயும் மனதளவுலயும் எதிர்ப்பாலினரா மாற்றத்தை உணர்ந்து, வீட்டுல உள்ளவங்களால துரத்தியடிக்கப்பட்ட பிள்ளைகள், எங்ககிட்ட அடைக்கலம் தேடி வந்துடுவாங்க. அவங்களை எங்களில் ஒருத்தரா சேர்த்துக்க, தாயம்மா முடிவு பண்ணுவாங்க. தாயம்மான்னா, எங்களைத் தத்தெடுத்து, தாய் ஸ்தானத்துல இருந்து பாத்துக்கறவங்க. நாங்க எங்கே போனாலும் அந்தப் பிள்ளைகளையும் கூட அழைச்சுக்கிட்டுப் போவோம். எந்த மாதிரி உடை உடுத்தணும், எப்படி கை தட்டணும், போற வர்ற இடங்கள்ல எப்படி நடந்துக்கணும்னு உடல்மொழியில இருந்து எல்லாத்தையும் அவங்களுக்கு சொல்லிக் குடுத்துடுவோம். எங்களில் ஒருத்தரா அவங்க ஆனதுக்கப்பறம், முழுசா திருநங்கைங்கிற அந்தஸ்த்தைப் பெற அவங்க அறுவைசிகிச்சை செஞ்சுக்கணும். அதுக்கான பணத்தைச் சம்பாதிக்கிறதுக்கான வழிமுறைகளையும் அவங்களுக்கு சொல்லிக் கொடுத்துடுவோம்.

மாதா பூஜை

அறுவைசிகிச்சை

பெண்ணாக இருந்துட்டு, ஆணாக மாறும் திருநம்பிகள் நம்மூர்ல ரொம்ப ரொம்பக் கம்மி. ஆணாக இருந்து பெண்ணாக மாறும் திருநங்கைகள்தான் இங்கே அதிகம். அவங்க உடலளவுல மாறணும்னா, அவங்களுக்கு உறுப்புகளை செயற்கையா பொருத்தணும். அதுக்கு மூணு லட்சத்துல இருந்து 5 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகும். முன்னாடி மும்பைக்குப் போய் ஆபரேஷன் பண்ணவேண்டிய நிலைமை இருந்தது. இப்போ நல்ல குணமும் திறமையும் உள்ள சில மருத்துவர்கள் இங்கேயே எங்களுக்குச் சிறந்த முறையில் ஆபரேஷன் செய்யறாங்க. இதை Penetrated sex-னு சொல்லுவாங்க. இந்த ஆபரேஷனுக்கான செலவை சம்பந்தப்பட்டவங்களும் அவங்களைத் தத்து எடுத்துக்கிட்ட அம்மாவும்தான் திரட்டணும். பெரும்பாலும் இந்த ஆபரேஷனை 15-ல இருந்து 20 வயசுக்குள்ள முடிச்சிடுவோம்னாலும், பணத் தட்டுப்பாட்டால பல வருடங்கள் தள்ளிப்போட்டு லேட்டா பண்றவங்களும் இருக்காங்க. பாரதி கண்ணம்மா

சடங்குகள்...

மற்ற ஆபரேஷன் மாதிரி இது சாதாரண விஷயம் கிடையாது. உடலும் உணர்வும் சம்பந்தப்பட்ட விஷயம். இந்த அறுவைசிகிச்சை செய்யறதுக்கு முன்னாடி அவங்கவங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி விரதம் இருப்பாங்க. அப்புறம் ஒரு நல்ல நாளாப் பார்த்து ஆபரேஷன் முடிச்சிட்டு, அதுக்கடுத்த 41 நாள்கள் தனி அறையிலதான் இருக்கணும். தன் வீட்டு ஆட்களைத் தவிர வேற யாரையும் பார்க்கக் கூடாது. கிட்டத்தட்ட பூப்பெய்திய பெண்ணை எப்படி நடத்துவோமோ, அப்படித்தான் நடத்துவோம். டாக்டர் பரிந்துரைச்ச உணவு முறைகளைத்தான் கடைப்பிடிக்கணும். அவங்க மனசளவுலயும் உடலளவுலயும் முழுசா பெண்ணாக உணருறதுக்காகத்தான் இத்தனை நாள் இடைவெளி. 41-வது நாள் ராத்திரி பெருங்கொண்டாட்டமா ஒரு திருவிழாபோல ஆரம்பிக்கும் ‘மாதா பூஜை.’

 

 

மாதா பூஜை

சேவலை வாகனமாக்கொண்ட மாதாதான் நாங்க எல்லாரும் வழிபடுற குலசாமி. ஆபரேஷன் பண்ணினதுல இருந்து 41-வது நாள் மண்டபம் பிடிச்சு, இந்த மாதா பூஜையை நடத்துவோம். பெரிய அளவுல படையல் போடுவோம். எங்களுக்கு ஒரு மாவட்டத்துக்கு ரெண்டு தலைவிகள் விகிதம் 32 மாவட்டங்களுக்கு 64 தலைவிகள் இருக்காங்க. எல்லாரையும் கூப்பிட்டு, இந்த விழாவை நடத்துவோம். ஒரு கல்யாண வீட்டுக்குண்டான அத்தனை கலகலப்பும் இங்கே இருக்கும். மொய் எழுதுறது, பந்தி போடுறதுல ஆரம்பிச்சு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு விடிய விடிய மாதா பூஜையைச் சிறப்பாக் கொண்டாடுவோம். பூப்புனித நீராட்டுவிழாவுல பண்றது மாதிரியே மஞ்சள் தண்ணி ஊத்தி குளிக்கவெச்சு, தத்தெடுத்த அம்மா, தன் கையால பச்சைப் பட்டு எடுத்துக் கொடுக்க, அதை அந்தத் திருநங்கை கட்டிக்கணும். அதுமட்டுமில்லாம, அவங்க செலவுல அரை கிராமோ, ஒரு கிராமோ தங்கம்வெச்சு கருகமணி மாலையை அந்தத் திருநங்கை கழுத்துல கட்டிவிடுவாங்க.

மாதா பூஜை

ஆற்றில் கரைத்தல்

அன்னைக்கு ராத்திரி, அந்தத் திருநங்கையோட முகத்தை சேலைத் தலைப்பால மூடி, கும்பத்துல பாலை ஊத்தி தலையில வெச்சு, பக்கத்துல இருக்கிற நீர்நிலைக்கு அழைச்சுட்டுப் போவாங்க. அங்கே அந்தத் திருநங்கை போட்டிருந்த உடையைத் தூக்கிப்போட்டுட்டு, கலசத்துல இருக்கிற பாலை நீர்நிலையில ஊத்திட்டு திரும்பி வருவாங்க. 'நேத்து வரையிலும் இருந்த வாழ்க்கை நிறைவடைஞ்சு, இன்னையில இருந்து முழுமையடைஞ்ச திருநங்கையா உனக்குப் புதுவாழ்க்கை தொடங்கியிருக்கு'னு உணர்த்துற சடங்கு இது.

திருநங்கைகளோட வழிபாட்டுல ஜாதி, மத, இன வேறுபாடுகள் எதுவும் இல்லை. அக்காவா, தங்கையா, அம்மாவா, பாட்டியா எல்லோருமே தங்கள் வீட்டு நிகழ்ச்சியா நினைச்சு, சந்தோஷமா, உணர்வுப்பூர்வமா, பயபக்தியோட இந்த வழிபாட்டுல கலந்துக்கிட்டு மாதாவை வணங்குறதோட, சம்பந்தப்பட்ட திருநங்கையையும் வாழ்த்துறாங்க..!" என்கிறார் பாரதி கண்ணம்மா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்