வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (18/07/2017)

கடைசி தொடர்பு:16:02 (18/07/2017)

டாக்டர் மனைவி மர்ம மரணம்! சிக்கும் முன்னாள் தி.மு.க. எம்எல்ஏ-வின் பேரன்

முன்னாள் தி.மு.க. எம்எல்ஏ பேரனின் மனைவி, மர்மமான முறையில் வீட்டில், முகத்தில் காயங்களுடன் இறந்துகிடந்ததில், சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில் உறவினர்கள் ஈடுபட்டு வருவதால், மன்னார்குடியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு, மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கும், மன்னார்குடியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. எம்எல்ஏ  கு.பாலசுப்பிரமணியனின் பேரன் இளஞ்சேகரனுக்கும் திருமணம் நடைபெற்றது. இளஞ்சேகரன் டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.  நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நல்லவிதமாகப் போய்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், திடீரென நேற்று, திவ்யா மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்துகிடந்துள்ளார். இதுகுறித்து, திவ்யாவின் வீட்டுக்கு தகவல் தெரிந்ததும், திவ்யாவின் சாவில்  மர்மம் உள்ளது எனக் கூறி, மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இளஞ்சேகரன், அவரது தந்தை முத்தழகன், தாய் ராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவுசெய்து, கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி, திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கீழப்பாலம் அருகே, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் திவ்யாவின் உறவினர்கள். 

திவ்யா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மன்னார்குடி காவல்துறையினர், கைதுசெய்வது குறித்து தீவிர ஆலோசனை செய்துவருகின்றனர். மேலும், முன்னாள் தி.மு.க. எம்எல்ஏ. என்பதால் தி.மு.க-வினர் அனைவரும் இளஞ்சேகரன் வீட்டில் இருக்கின்றனர். இதனால், போலீஸார் தயக்கத்தில் இருக்கிறார்கள். வழக்குப்பதிவுசெய்வது முக்கியமல்ல, அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் சாலை மறியலைக் கைவிடுவோம் எனக் கூறி, திவ்யாவின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இளஞ்சேகரன் தரப்பினரோ, திருடன் வந்து நகைகளைத் திருடிவிட்டு, கொன்றுபோட்டுள்ளான் எனக் கூறிவருகிறார்களாம். இளஞ்சேகரன் குடும்பத்தினருக்கு சசிகலாவின் உறவினரான இளவரசியின் அண்ணன் நெருங்கிய உறவினர் என்பதால், காவல்துறையினர் கைது நடவடிக்கையைத் தாமதப்படுத்திவருகின்றனர் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தில். 
  

நீங்க எப்படி பீல் பண்றீங்க