நல்லாசிரியர் விருது குறித்த குழப்பத்தில் ஆசிரியர்கள்!

ஆசிரியராகப் பணி தொடங்கி, நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளே ஆசிரியர் தினமாக (Teachers' day) ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி இந்தியாவில் கொண்டாப்படுகிறது. 


இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்த ராதாகிருஷ்ணன் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு 130-க்கும் மேற்பட்ட கெளரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன. 


மாணவர்களின் கல்விக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் பாடுபட்ட ராதாகிருஷ்ணன் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்படுள்ளது.  மக்களால் போற்றப்பட்ட ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரில், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தின்போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும் தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது. ஆனால், தற்போது நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி விருது வழங்கப்படுமா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


தமிழக அரசின் விருது பெற்றவருக்கு மட்டுமே, தேசிய அளவில் விருது வழங்கப்படும். ஆண்டுதோறும், மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஜூலை முதல் வாரத்துக்குள் பெறப்படும். இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திறமையாகக் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் வகையில் விதிகள் மாற்றப்படுகின்றன. அதனால், விண்ணப்ப அறிவிப்பு தாமதமாகிறது. குறித்த நேரத்தில் விண்ணப்பத்துக்கான அறிவிப்பு வெளியாகாததால் ஆசிரியர் தினத்தில் திட்டமிட்டபடி, விருது வழங்கப்படுமா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!