எதுகை மோனையில் எழுத்தை ஆண்டவர்... கவிஞர் வாலி நினைவுதின சிறப்புப் பகிர்வு

வாலி, திரையிசைப் பாடல்களால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டவர். ஹீரோக்களின் இமேஜை ரசிகர்களின் மனதில் பதிய வைத்ததில் வாலியின் பாடல்வரிகள் சாகாவரிகள். எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்ததில் வாலியின் தத்துவ வரிகளுக்கும் தற்பெருமை உண்டு. சினிமாவில் அவர் எடக்குமடக்கு பாடல்களை எழுதினார் என்கிற விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு. ஆனால், வாலியின் கவிதைகள் சமூகப் பார்வை கொண்டவை. இளவரசன் - திவ்யா காதல் விவகாரம் தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பரவிக் கிடந்த நேரத்தில் 'எமதர்மபுரி ஆகாமல் சமதர்மபுரி' ஆகவேண்டும் என பாடினார்.

வாலி


‛ஈழப் போர் முள்ளிவாய்க்கால் வரை’ தொடரில் கருணாநிதியை சீமான் கடுமையாக விமர்சித்தார். ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க அங்கம் வகித்துக்கொண்டிருந்தது. ஈழப்போர் நடைபெற்றபோது தி.மு.க அமைச்சர்கள் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். இந்தக் கோபத்தை எல்லாம் 'திருப்பி அடிப்பேன்' தொடரில் சீமான் கொட்டினார்.

'திருப்பி அடிப்பேன்' தொடர் வெளிவந்துகொண்டிருந்தபோது வாலி ஒரு கவியரங்கில் இப்படி பாடினார். 'செல்வம் படைத்தவனெல்லாம் சீமான் இல்லை சிந்தையில் உயரம் கொட்டுகிறானே அவன்தான் சீமான்.'  வாலியின் வார்த்தை ஜாலத்துக்கு இதோ மற்றுமொரு உதாரணம். கருணாநிதியின் கடைசி ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது. அப்போது மத்தியில் தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தொலைபேசிக் கட்டணத்தை ஒரு ரூபாயாக மாற்றினார். அந்த நேரத்தில் வாலி, 'ஒரு ரூபாய்க்கு அரிசி ஒரு கிலோ, ஒரு பேரனோ ஒரு ரூபாய்க்கு 'ஹலோ' என்று எழுதினார்.

வாலியின் வீட்டுக்கு வராத வி.ஐ.பி-க்களே கிடையாது. அப்படி ஒரு வி.ஐ.பி வாலியைப் பார்க்க வந்தார். அது பேசத் தெரியாத பாம்பு. வீட்டிற்குள் பாம்பு நுழைந்ததால் வீடு களேபரமானது. பாம்பைப் பிடிக்க வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் வீட்டுக்குள் நுழைந்தனர். விஷயத்தை கேள்விப்பட்டு கேமராக்களோடு வாலியில் வீட்டின் முன்பு மீடியாவினர் குவிந்தனர். வீட்டிற்கு உள்ளே வனத்துறையினர் பாம்பை பிடிக்க போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது வெளியே வாலி ஜாலி மூடில் இருந்தார். 'படமெடுக்கும் பாம்பை படமெடுக்க வந்திருக்கும் பத்திரிகையாளர்களே வருக' என எதுகை மோனை கொட்டினார். 

Lyricist Vaali

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வென்றது. அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக அரசியல் தரகர் நீரா ராடியாவோடு பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல்கள் எல்லாம் டேப் வழியாக லீக் ஆனது. அந்த நேரத்தில் வாலி பாடிய கவிதை இது.

பாட்டு நடப்பை யாப்புகள் பேசுவதுபோல்

பண்ணை வீட்டு நடப்பை தோப்புகள் பேசுவதுபோல்

முழங்கால் மூட்டு நடப்பை மூப்புகள் பேசுவதுபோல்

நம்முடைய நாட்டு நடப்பை டேப்புகள் பேசுகின்றனவோ?

வைகுண்ட பதவி தரும் விஷ்ணுவும்,

சிவலோக பதவி தரும் சிவனும்

மலைத்து நிற்கிறார்கள் ஜோடியாய் வாய் மூடியாய்.

அவர்களே அதிசயிக்கிறார்கள்

இன்னாருக்கு இன்ன பதவி என தீர்மானிப்பது

கார்டியா என்கிற லேடியா என்று.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!