வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (18/07/2017)

கடைசி தொடர்பு:18:35 (18/07/2017)

ஐந்தாவது நாளாகத் தொடரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

 கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி-யில் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது


  

 "என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிலக்கரி நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நிரந்தர தன்மைகொண்ட பணியைச் செய்துவருகின்றனர். அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி, மத்திய தொழிலாளர் ஆணையர் முன்பாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைக்காக சட்டப்படியான ஒப்பந்தங்களும் ஏற்பட்டுள்ளன.


கடந்த 2014-ம் ஆண்டு இவர்களை பணிமூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை என்.எல்.சி. நிர்வாகம் அமல்படுத்தவில்லை. ஒரு சொற்ப எண்ணிக்கையாக 200 தொழிலாளர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். சுரங்கம் 1-எ பகுதியில் 1,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 12.07.17 அன்று எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 26 ஷிப்டுகளை 19 ஆக குறைத்து உத்தரவிட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று என்.எல்.சி. நிர்வாகம் இதை அறிவித்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நிர்வாகத்தின் இந்தத் திடீர் நடவடிக்கையைக் கண்டித்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல்- கைது எனப் போராட்டங்கள் நடத்தியும் கைதான நிலையில் உண்ணாவிரதமும் இருந்துவருகின்றனர்.


    

"எங்களுக்கு அனைத்து தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவளித்து வருகின்றனர். 10 ஆயிரத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் எங்களின் வேலையை 19 ஷிப்டாகக் குறைப்பது எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். மேலும், இத்தொழிலாளர்கள் என்.எல்.சி-க்கு நிலம், வீடு போன்றவற்றைக் கொடுத்த சுற்றுப்புற கிராம விவசாயிகள். அத்தோடு எங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வெளி மாநில இளைஞர்களுக்கு நிர்வாகம் முன்னுரிமை அளிக்கிறது. இதனால், என்.எல்.சி-யில் தொழில் அமைதி சீர்கெட்டு வருகிறது. இதற்கு என்.எல்.சி. நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையே காரணம்" என்கிறார்கள் ஒப்பந்த தொழிலாளர்கள்.