வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (18/07/2017)

கடைசி தொடர்பு:18:42 (18/07/2017)

'பாகுபலி பட க்ராஃபிக்ஸை விஞ்சும் சசிகலா சிறை வீடியோ': சொல்கிறார் அ.தி.மு.க பிரமுகர்

சசிகலாவுக்கு சிறையில், சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

புகழேந்தி


இந்நிலையில், கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகேழந்தி அடையாற்றில் உள்ள டி.டி.வி தினகரன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "2 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது, ஓர் அப்பட்டமான பொய். 30-ம் தேதி அங்கு வேலை செய்தவர்கள் ஏதும் சொல்லவில்லை. இரண்டு மெமோ வந்த பிறகு, 2 கோடி கை மாற்றப்பட்டதாகச் சொல்லுகிறார். தனது புகைப்படம் சமூக வலைதளங்களில் இருப்பதை, இன்னும் அதிகமாகப் பெருமைப்படுத்திக்கொள்ள இந்த வேலையை அவர் செய்துள்ளார்.


சிறையிலிருந்து வந்த புகைப்படம் மற்றும் வீடியோ சுத்தமான பொய். க்ராஃபிக்ஸ் செய்யப்பட்ட படம். அந்தப் புகைப்படத்தில் இருப்பது அந்த சிறையே இல்லை. இதன் க்ராஃபிக்ஸ்கள், பாகுபலி படத்தையை விஞ்சிவிட்டன. அங்கே நடப்பதோ காங்கிரஸ் ஆட்சி. அப்படி இருக்கும்போது, அவர்கள் எப்படி எங்களுக்கு உதவ முடியும். இணையதளங்களில் வெளிவந்த குரலும் படமும் அப்பட்டமான பொய். எங்கள் பொதுச் செயலாளருக்கு எந்த ஒரு வசதியும் செய்துத் தரப்படவில்லை. இவை அத்தனையும் ரூபாவின் திட்டமிட்ட சதி. இதில் பி.ஜே.பி-யும் அரசியல் நடக்கிறது" என்றார்.