'டெங்கு காய்ச்சலை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும்': கன்னியாகுமரி மக்கள் கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில், டெங்கு காய்ச்சலுக்கு சந்தோஷ் என்ற  ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம், பெரும் சோகத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் போர்க் கால அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது, கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு, டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். இப்போது, குமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்நிலையில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த ஐந்து நாள்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் சந்தோஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் முன்பு, போர்க் கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!