வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (18/07/2017)

கடைசி தொடர்பு:15:00 (19/07/2017)

'நம்மாழ்வார் மேல் சத்தியமா ஓஎன்ஜிசி-க்கு ஆதரவா நாங்க செயல்படலை': நெல் ஜெயராமன், ஶ்ரீராம் விளக்கம்!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலத்தில், கடந்த பல ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம், பெட்ரோல்-கேஸ் எடுத்துவருகிறது. இதனால், குடிநீர் உள்ளிட்ட தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, இந்தப் பகுதி மக்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இங்கு அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, புதிய விரிவாக்கப் பணிகளை ஓஎன்ஜிசி மேற்கொண்டது. அதிலிருந்தே இங்கு பதற்ற தீ பற்றிக்கொண்டது. காவல்துறையும் ஓஎன்ஜிசி-யும் மக்களை ஒடுக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜுன் 30-ம் தேதி, ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இயற்கை விவசாயி ஸ்ரீராம் நிலத்தில் கச்சா எண்ணெய் பாய்ந்தோடியது. இதற்கு நிரந்தரத் தீர்வு கோரி காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்கள் மக்கள். காவல்துறையினர், காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியதில் பெண்கள் உள்பட பலர் படுகாயமடைந்தார்கள்.

இந்தச் சுழலில்தான் சமூக ஆர்வலர்  அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினர் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு, அ. மார்க்ஸ் தெரிவித்த ஒரு தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள் மற்றும் கதிராமங்கலம் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. குத்தாலத்தில் உள்ள  ஓஎன்ஜிசி அலுவலகத்தில் இயற்கை விவசாயிகளான ஸ்ரீராம் மற்றும் நெல் ஜெயராமனை நாங்கள் பார்த்தோம்.  ஓஎன்ஜிசி அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினோம். ஓஎன்ஜிசி பணிகளால் இந்தப் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என நெல்.ஜெயராமன், ஸ்ரீராம் இருவரும் அறிக்கை வெளியிட இருப்பதாக ஓஎன்ஜிசி அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாக அ. மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார். இது, பல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய  ஓஎன்ஜிசி-க்கு ஆதரவாக இயற்கை விவசாயிகள் செயல்படலாமா எனக் கடுமையான எதிர்ப்புகள் உருவானது. உண்மை நிலையை அறிய, ஸ்ரீராமிடம் பேசினோம்.

‘ஓஎன்ஜிசி-யால் என்னோட நிலம் பாதிக்கப்பட்டுக் கிடக்கு. ஏழு வருஷம் கஷ்டப்பட்டு இயற்கை விவசாய பூமியா மாத்தின நிலம் இது. கச்சா எண்ணெய்க் கசிவால் இப்ப நஞ்சாகிக் கிடக்கு. மழை பெஞ்சு அடுத்தடுத்த நிலத்துக்கும் கச்சா எண்ணெய் படர்ந்து மலடாயிடுச்சு. நான் எப்படி அவங்களுக்கு ஆதரவா நடந்துக்க முடியும். என்னோட நிலம் பாதிக்கப்பட்டு 10 நாள்களுக்கு மேலாகியும் இதை ஆக்கபூர்வமா சரிசெய்ய  ஓஎன்ஜிசி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கலை. கச்சா எண்ணெய் பாய்ஞ்ச நிலத்து மேல புதுசா மண் அடிச்சி கொடுக்கிறதா அவங்க சொன்னாங்க. இது முறையான தீர்வு கிடையாது. அதனால் நான் வேண்டாம்னு மறுத்துட்டேன். கச்சா எண்ணெய் பாய்ஞ்ச மண்ணை முழுமையா நீக்கிட்டு, புதுசா நல்ல உயிர்ப்புள்ள, ரசாயனத்தன்மை இல்லாத மண்ணைக் கொண்டுவந்து போடணும்னு வலியுறுத்துறதுக்காகத்தான் நெல்.ஜெயராமனை அழைச்சிக்கிட்டு குத்தாலத்துல உள்ள  ஓஎன்ஜிசி அலுவலகத்துக்குப் போனேன். அங்க நான் வரமாட்டேன்னு நெல்.ஜெயராமன் எவ்வளவோ மறுத்தார். அங்க தனியா போக எனக்கு தயக்கமா இருந்துச்சு. நிலத்தை உடனடியா சரி செய்யணும். கேஸ் குழாய்களை எங்க பகுதிகள்ல உள்ள விளைநிலங்கள்ல இருந்து நீக்கணும்னு வலியுறுத்திதான்  ஓஎன்ஜிசி அதிகாரிகள்கிட்ட கடிதம் கொடுத்தோம். சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு இது உதவியா இருக்கும்ங்கிறதுனாலதான் இதை நாங்க செஞ்சோம்.  ஓஎன்ஜிசி-யால எங்க ஊரே நிம்மதி இழந்து கிடக்கு. என் உயிரே போனாலும்  ஓஎன்ஜிசி-க்கு ஆதரவா நான் செயல்பட மாட்டேன்.” என்றார் ஸ்ரீராம்

 நெல்.ஜெயராமனிடம் பேசினோம். அவரும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார்.