Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெடித்துக் கிடக்கும் புழல் ஏரி; வெம்பிக் கிடக்கும் மக்கள்! - என்ன செய்யப்போகிறார் தமிழக பிக்பாஸ்?

புழல்

'எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டேன்' என்று தொண்டை வறள முனகிக் கிடக்கிறது... இதுநாள்வரையிலும் சென்னைக்குக் குடிநீர் வழங்கிய புழல் ஏரி...!  'சொட்டுத் தண்ணீர் இல்லை'  என வரிசையாக வறட்சிக்குள் விழுந்துவரும் ஏரிகளின் பட்டியலில், புதுவரவு புழல் ஏரி! சென்னை மக்களின் தாகம் தணித்துவந்த பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் வரலாறு காணாத வறட்சியின் அடையாளமாக பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. '140 வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு கடும் வறட்சிக்கு இலக்காகியிருக்கிறது சென்னை' என்று புள்ளிவிபரம் காட்டுகிறார்கள் சூழலியலாளர்கள். 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மையானது புழல் ஏரி. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த பிரமாண்ட ஏரியின் தற்போதைய நீர் இருப்பு '0 மில்லியன் கன அடி'யை எட்டிவிட்டதாக அதிர்ச்சி செய்தியை அறிவித்திருக்கிறது பொதுப்பணித்துறை. 
''கிருஷ்ணா நதி நீர் கண்டலேறு வழியாக பூண்டி, சோழவரம் வந்து நிறைவாக புழல் ஏரியை வந்தடையும். இங்கே சேமிக்கப்படும் தண்ணீரானது புழல் நீரேற்று நிலையம் வழியாகக் கீழ்ப்பாக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களின் தாகம் தணிக்கும் குடிநீராக விநியோகிக்கப்படும். இப்போது, புழலிலேயும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நீரைச் சுத்திகரிக்கிறார்கள். புழல் ஏரி பராமரிப்பை பொதுப்பணித்துறையும், தண்ணீர் விநியோகத்தை சென்னைக் குடிநீர் வாரியமும் இணைந்து செயல்படுத்திவருகிறது.
எல்லாம் சரி... ஆனால், ஏரியில் தண்ணீரைச் சேமித்து வைக்க அரசுகள் எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்வதில்லை. அதனால்தான் இப்போது புழல் ஏரி சொட்டுத் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளிச் செல்லலாம் என்று அரசு அறிவித்தது. புழல் ஏரியில் அதிகப்பட்சம் 3 பொக்லைன் எந்திரங்களை வைத்து மண் அள்ளிக்கொள்ளலாம். ஆனால், தினமும் பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன்களைக் கொண்டு மண் அள்ளினார்கள். அதுவும், ஏரி முழுக்க சீராக அள்ளாமல், ஆங்காங்கே பெரிய பெரிய குழிகளாக மணலை அள்ளியதால், இப்போது அந்தக் குழிகளில் மட்டும் சிறிதளவு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. முறையாகத் தூர் வாரப்படவில்லை. 

புழல் ஏரியைச் சுற்றி செங்குன்றம், பம்மதுகுளம், நாரவாரிக்குப்பம், பொத்தூர், ஒரகடம், திருமுல்லைவாயில், சூரப்பட்டு பகுதிகள் உள்ளன. இங்குள்ள லோக்கல் அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏரிக்குள் நிறைய ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள். ஏரிக்கு நீர்வரத்து வரும் பகுதிகள் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளாக அடைபட்டுப் போனதால், மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துபோனது. 

வருமுன் காக்கும் விதமாக ஏரியை முறையாகத் தூர்வாரியிருக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தியிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், 'இயற்கை வஞ்சித்துவிட்டதால் ஏரி வறண்டுபோய்விட்டது' என்று அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இப்போது காரணம் சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார்கள்'' என்று குமுறுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத்தலைவரான பால்ராஜ்.

சென்னைக் குடிநீர்வாரிய அதிகாரிகளிடம் புழல் ஏரியின் நீர் ஆதாரம் குறித்துப் பேசினோம்.. ''சென்னைக்கு இப்போது ஒரு நாளைக்கு 240 மில்லியன் கன அடி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில், வெறும் 15 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே புழல் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சப்ளையாகிறது. இந்தத் தண்ணீரும்கூட பூண்டி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட விவசாய நிலங்களில் உள்ள கிணறு மற்றும் போர்வெல்-லில் இருந்துதான் பெறப்படுகிறது. 

புழல்

கடந்த வருடம் இதே நாளில், புழல் ஏரியில், 1,128 மில்லியன் கன அடி நீர் கையிருப்பு இருந்தது. ஆனால், இப்போது '0' கன அடியாக வற்றிவிட்டது. இதிலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாதுதான். ஆனாலும் நிலைமை சீரியஸாகப் போய்விட்டதால், வேறு வழியின்றி இதிலிருந்தும் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து அனுப்புகிறோம். இதுவும்கூட அதிகப்பட்சம் ஒரு வாரம் தாங்கும். அவ்வளவுதான்'' என்றனர் விரக்தியாக.

ஏரிப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், 'இன்றைய வறட்சி நிலைமைக்கு யார் பொறுப்பு...' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

''கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு இயற்கை பொய்த்துவிட்டது. அதனால்தான் இப்படியொரு வறட்சி. தூர் வாரும் பணியை முன்னரே முறைப்படி எடுத்திருந்தால், இதுபோன்ற வறட்சிக் காலங்களில் ஓரளவு தாக்குப்பிடிக்க முடிந்திருக்கும். விவசாயிகள் தங்கள் மண் வளத்துக்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து புழல் ஏரியில் பலரும் மண் எடுத்துச் சென்றனர். கட்டட வேலைப்பாடுகளின்போது பள்ளமான பகுதியை நிரப்புவதற்குத் தேவையான சவுடு மண்ணை ஏரியில் இருந்து எடுத்துச்சென்றவர்களால்தான் ஏரி முழுக்க இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஏரி, குளங்களில் முறையாகத் தூர் வாருவதற்குத் தேவையான திட்ட மதிப்பீடுகளை எங்கள் துறை சார்பாக தயார் செய்து அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளோம். பதில் வந்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்ற வழக்கமான பதிலைத் தந்தனர்.

பொதுப்பணித்துறையைக் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர், 'போராடுவது ஃபேஷனாகிவிட்டது' என்று சொல்லி ஏற்கெனவே மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தினார். இப்போது 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்று சொல்லி மக்களைத் தவிக்க விட்டுவிடாமல், நீர் நிலைகளைக் காப்பாற்றுகிற நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் தமிழக பிக்பாஸ்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close