வெளியிடப்பட்ட நேரம்: 05:24 (19/07/2017)

கடைசி தொடர்பு:10:24 (19/07/2017)

உ.பி-யில் புதிய தேர்தல் கூட்டணி: ஆகஸ்ட் 27-ல் மாயாவதி அறிவிப்பு!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனது மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.  அவருடைய எம்பி., பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் நேற்று, மாநிலங்கள் அவையில் தலித்துகளின் பிரச்னைகுறித்து பேச தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று கூறி அவையிலிருந்து வெளியேறியவர், தனது எம்பி., பதவியையும் ராஜினாமாசெய்துள்ளார். இந்தச் செயலை லாலு பிரசாத் வரவேற்றுள்ளார். இதுகுறித்து லாலு பிரசாத், “வரலாற்றில் இன்றைய நாள் கருப்பு தினமாக நினைவுகூறப்படும். மதிப்புயர்ந்த தலித் தலைவர், ஏழைகளைப் பற்றி மாநிலங்களவையில் பேச அனுமதிக்கப்படவில்லை” என்றார். 

மாயாவதி

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டும் நிலையில், லாலு அணி மாறும் மனநிலையில் இப்படிப் பேசுவதாகச் சொல்கிறார்கள். லாலுவின் திடீர் மாயாவதி ஆதரவு, சமஜ்வாதி கட்சியின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவையும் மாயாவதியையும் இணைந்து செயல்பட வைக்கும் விருப்பத்தையே காட்டுவதாக, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆகஸ்ட் 27-ம் தேதி, பா.ஜ.க அரசைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி கட்சி நடத்த இருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அகிலேஷ், லாலு ஆகியோருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை, மாயாவதி ஆரம்பித்துவிட்டார் என்றே உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க