தீவிரமடைந்த என்.எல்.சி தொழிலாளர்கள் போராட்டம் - தொடங்கியது பேச்சுவார்த்தை

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி-யில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஏழு நாள்களாகியும் போராட்டம் முடிவுக்கு வராததால் புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் ஒப்பந்த தொழிலாளர் விவகாரம் தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தைத் தொடங்கியிருக்கிறது.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி) அமைப்பதற்கு இடம் கொடுத்தவர்களின் வாரிசுகள் சுமார் 10 ஆயிரம் பேர் கடந்த
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டக் கோரிக்கைகளை மத்திய தொழிலாளர் ஆணையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சட்டப்படி ஒப்பந்தம் போடப்பட்டது. அதேபோல கடந்த 2014-ம் ஆண்டு “பணி மூப்பு அடிப்படையில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை முறைப்படி அமல்படுத்தாத என்.எல்.சி நிர்வாகம் வெறும் கண் துடைப்புக்காக 200 பேரை மட்டுமே பணி நிரந்தரம் செய்தது.

இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. இந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் 26 நாள் பணி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி சுரங்கம் 1-ஏ பிரிவில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 19 நாள்களாகக் குறைத்து உத்தரவிட்டது என்.எல்.சி நிர்வாகம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தத் தொழிலாளர்கள் முற்றுகை, உண்ணாவிரதம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 28-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்டப் பல்வேறு தீர்மாணங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் உள்ள உதவித் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்புப் பேச்சு வார்த்தைத் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்தப் பேச்சு வார்த்தையில் என்.எல்.சி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர் சங்கம், என்.எல்.சி-க்கு நிலம் வழங்கியவர்கள் சங்கம் மற்றும் என்.எல்.சி நிர்வாகத்தினர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!