வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (19/07/2017)

கடைசி தொடர்பு:15:49 (19/07/2017)

'திலீப் கிரிமினல் அல்ல'- அணி சேர்ந்த அடூர், சக்கரியா

திரைப்பட நடிகையை காரில் கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட நடிகர் திலீப் விவகாரம், மலையாள இலக்கிய உலகையும் விட்டுவைக்கவில்லை. திலீப் கைது விவகாரத்தால், இதுவரை எதிரும் புதிருமாக செயல்பட்டுவந்த அடூர் கோபாலகிருஷ்ணனும் பால் சக்கரியாவும் இணைந்திருக்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம், கொச்சியில் காரில் சென்றுகொண்டிருந்த திரைப்பட நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பல்சர் சுனில் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில், நடிகர் திலீப் கடந்த 10-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம், கேரளாவையே இரண்டு துண்டுகளாகக் கூறுபோட்டுவிட்டதாகவே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். திலீப்புக்கு ஆதரவாக ஒரு குழுவினரும் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டில் மற்றொரு குழுவினருமாக மக்கள் பிரிந்து நிற்கிறார்கள். டீ கடை, உணவகம், பேருந்து நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் திலீப் கைது விவகாரம்குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுவருகிறது. திலீப் திட்டமிட்டு இந்த விவகாரத்தில் சிக்கவைக்கப்பட்டதாக ஒருதரப்பினரும் ஒரு பெண்ணை இரக்கமே இல்லாமல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கொடூர மனம் கொண்டவராக மற்றொரு தரப்பினரும் சித்தரித்துவருகின்றனர். 

இந்த நிலையில், மலையாளத் திரையுலகினர், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு தளத்திலும் நடிகர் திலீப் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிவருகிறது.  திலீப் கைதுசெய்யப்பட்டதும் அவருக்கு எதிராக போராட்டம் நடந்ததுடன், அவரது திரையரங்கங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தச் சமயத்தில், கேரள திரையுலகின் பிதாமகனாகக் கருதப்படும் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், ’நான் பழகிய வகையில் நடிகர் திலீப் கிரிமினலாகச் செயல்படக்கூடியவர் அல்ல” எனத் தெரிவித்தார்.

திரையுலகிலிருந்து நடிகர் திலீப்புக்கு ஆதரவாக வெளிவந்த முதல் குரல் இது என்பதால், பல்வேறு தரப்பினரும் இது பற்றி விவாதங்களை எழுப்பினார்கள். இந்த நேரத்தில், அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக மலையாள இலக்கிய உலகின் முன்னோடியான பால் சக்கரியா களம் இறங்கினார். அவர், ‘நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்ட சம்பவம் என்பது ரத்த வேட்டையாடும் மிருகங்களின் நடவடிக்கைக்கு ஒப்பானதாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். 

இவர்களின் கருத்துக்கு எதிர்க் கருத்துகள் எழுந்துவருகின்றன. மலையாள நாவலாசிரியரான என்.எஸ்.மாதவன் கூறுகையில், ’பால் சக்கரியாவின் கதையை திரைப்படமாக எடுத்தது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இப்போது, இருவரும் இணைந்திருக்கிறார்கள். இருவரையும் கடவுள் பிரித்ததை நடிகர் திலீப் இணைத்திருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்படும் வரை திலீப்பை குற்றம்சாட்டக்கூடாது என இவர்கள் பேசுவது குற்றவாளிக்கு சாதகமானதாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது என்பதைப் புரிந்து செயல்படுவது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பெஞ்சமின், ‘’நடிகர் திலீப்புக்காக அடூரும் சக்காரியாவும் இணைந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் இதைப் பார்க்கையில், பால் சக்கரியாவின் ஒரு கதையில் வரக்கூடிய பாஸ்கர படேல்கர் என்ற கேரக்டர்தான் நினைவுக்குவருகிறது. அந்த கேரக்டர் காரணமாகவே அடூர் கோபாலகிருஷ்ணன், ’விதேயம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்போது, அந்தக் கதாபாத்திரம் எனக்கு நினைவுக்குவருகிறது’’ என கூறினார்.

எழுத்தாளரான சுமேஷ் சந்திரோத், ‘இந்த சமூகத்தில் வன்முறையைக் கையில் எடுத்த நபர்களுக்கு அடூர், சக்கரியா போன்றவர்கள் வக்காலத்து வாங்கக்கூடாது’ எனச் சாடினார். நடிகர் கருணாகரன் கூறுகையில், ‘அடூர் கோபாலகிருஷ்ணனின் கருத்து வன்முறையாளர்களை ஆதரிப்பதுபோல இருக்கிறது’ என்றார். மலையாள பெண்ணிய எழுத்தாளரான சாரதாகுட்டி, ‘குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பலரும் பொங்கி எழுவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் நலன் கருதி மீடியாக்கள் செயல்பட வேண்டும். அத்துடன், குற்றவாளிகள் தப்பிவிட யாரும் சிறு உதவியைக்கூட செய்துவிடக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.

திலீப் விவகாரம், மலையாள திரையுலகை மட்டும் அல்லாமல் இலக்கிய உலகையும் விட்டுவைக்கவில்லை.