திருச்சி சிவாவின் நிதியைத் திருப்பி அனுப்பிய அரசு - கொதிக்கும் வழக்கறிஞர்கள் | Trichi Siva's fund back to the district administration

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (19/07/2017)

கடைசி தொடர்பு:16:10 (19/07/2017)

திருச்சி சிவாவின் நிதியைத் திருப்பி அனுப்பிய அரசு - கொதிக்கும் வழக்கறிஞர்கள்

திருச்சி சிவா எம்பி., ஒதுக்கிய நிதியை, திருச்சி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து திருப்பி அனுப்பிவருவது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஆட்சியரிடம் மனு

திருச்சி நீதிமன்றத்தில் ஆடிட்டோரியம் கட்டவேண்டும் என்கிற கோரிக்கையை, திருச்சி வழக்கறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, திருச்சி சிவா எம்பி., தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய்  வழங்கினார். இந்த நிதி, மாவட்ட நிர்வாகம் மூலம்தான் திட்டத்துக்காக வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், திருச்சி மாவட்ட நிர்வாகம், அந்த நிதியைத் திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் இன்று, திருச்சி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளான பன்னீர்செல்வம்,ஜே.கே.ஜெயசீலன், கராத்தே முத்துக்குமார் ஆகியோர் தலைமையிலான, 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணியைச் சந்தித்து, இதுகுறித்து மனு அளித்தனர்.

அப்போது, தங்கள் கோரிக்கையை ஏற்று திருச்சி நீதிமன்ற வளாகத்தில் கூட்ட அரங்கம் கட்டவேண்டிய அவசியத்தை எடுதுரைத்தனர். மேலும், திருச்சி சிவா எம்பி வழங்கிய நிதி, ரூபாய் 40 லட்சத்தைத் திருப்பி அனுப்பியது தொடர்பாகவும் அந்தப் பணத்தை பெற்றுத் தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மனுவை வாங்கிக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து பரிசீலனைச் செய்வதுடன், நீதிமன்ற வளாகத்தில் கூட்ட அரங்கம் கட்ட நடவடிக்கை எடுப்படும் என்றும் உறுதியளித்தார்.

திருச்சி சிவா வழங்கும் நிதியைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்புகிறது. திருச்சி ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க வழங்கிய 1கோடி நிதியையும் இதேபோல மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பியது. பிரச்னை விஸ்வரூபம் எடுக்கவேதான், ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. அதேபோல, திருச்சி நீதிமன்ற ஆடிட்டோரியம் பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.