சென்னைக்கு எவ்வளவு குடிநீர் தேவை... எவ்வளவு இருக்கிறது? #VikatanData | Puzhal lake is dry. Is there water in Chennai?

வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (19/07/2017)

கடைசி தொடர்பு:19:39 (19/07/2017)

சென்னைக்கு எவ்வளவு குடிநீர் தேவை... எவ்வளவு இருக்கிறது? #VikatanData

சென்னை தண்ணீர்

2015ஆம் வருடத்தின் இறுதியில் சென்னையில் பெய்த கனமழை நமக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்தது. அன்று தேங்கிய நீர், வெள்ளத்தால் மட்டும் ஏற்பட்டது அல்ல. மழை நீர் வடிவதற்கு கூட மண் தரை இன்றி, கான்க்ரீட் நகரம் ஆகிப்போன நம் சிங்கார சென்னையின் தவறு அது. இப்பெரும் மழை கற்றுத் தந்த பாடத்தினால் நகரத்தின் வடிகால் அமைப்புகளை ஆராய்ந்து பழுதுப் போனதை சரி செய்தார்கள். வெள்ளத்திலும் கனமழையிலும் கிடைத்த நீரை வைத்து சென்ற வருடம் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்தது சென்னை. ஆனால் 2016இல் வந்தது என்னவோ புயல்! இந்த வருடம் பயன்படுத்தும் அளவுக்கு எங்கும் தண்ணீர் சேரவில்லை. போதாக் குறைக்கு, இந்த புயல் இருந்த மரங்களில் பாதிக்கு மேல் சுருட்டிக் கொண்டு போக, சென்னை தன் அழகியலையும் இழந்து நிற்கிறது.

அன்றாட நீர் தேவை எவ்வளவு?

சென்னை நகரை பொறுத்தவரை, ஒரு நாளைக்கு சுமார் 83 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இது புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி ஆகிவற்றிலிருந்து 40 நீரேற்றும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு குழாய்கள் மற்றும் லாரிகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. இவை தவிர வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவற்றின் மூலமும் நீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இதில் 28 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், தட்டுப்பாட்டை சமாளிக்க நெய்வேலி சுரங்கத்தின் உபரி நீர், கல்குவாரி நீர் என்று கை ஏந்தும் நிலை வந்தது.

சென்னை தண்ணீர்

13 வருடங்களுக்கு பிறகு வறண்டது புழல்

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னையில் தற்போது பெரும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர் வழங்கும் 4 ஏரிகளிலும் நீர் மளமளவென குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது.மற்ற மூன்று ஏரிகளையும் சேர்த்து 111 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்தது. இப்போது சோகத்தின் உச்சமாக, புழல் எரியும் வறண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கையிருப்பாக பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் மட்டும் மொத்தமாக 108 மில்லியன் கன அடி நீர் உள்ளது. சென்ற வருடம், இதே நாளில், 4 ஏரிகளிலும் சேர்த்து 3757 மில்லியன் கன அடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை தண்ணீர்

பூண்டி ஏரி

இதுவரை கண்டிராத குடிநீர் தட்டுப்பாடு

தற்போதைய நிலையில் நகரின் பல இடங்களுக்கு, 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் லாரி வருகிறது. இந்த பாதிப்பு இனி எல்லா இடத்திற்கும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். செம்பரம்பாக்கம் ஏரியை மட்டுமே நம்பி இருக்கும் சென்னை, அதுவும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியுமால் திண்டாடி கொண்டிருக்கிறது. மழை வந்தால் மட்டுமே மோட்சம் என்று அனைவரும் வானத்தைப் பார்த்தவாறே அமர்ந்து இருக்கிறார்கள். சென்ற வாரம் பெய்தது போல் மிதமான மழையாவது தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் இந்த பிரச்சனையை கொஞ்சம் சமாளிக்க முடியும். இயற்கையை முடிந்த அளவு வளர்ச்சிக்காக அழித்துவிட்டு, இப்போது இயற்கையிடமே கை ஏந்தும் நிலை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்