வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (19/07/2017)

கடைசி தொடர்பு:17:41 (19/07/2017)

நடிகர் திலீப்புக்கு எதிராகத் திரும்பும் மஞ்சு வாரியர்

கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி பிரபல மலையாள நடிகை ஷூட்டிங் முடிந்து திருச்சூரிலிருந்து கொச்சி நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கொச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சம்பவம் தென்னிந்திய திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு  மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நடிகை கடத்தல் தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்ட 7 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். 

 

பல்சர் சுனிலின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப்தான் நடிகைக் கடத்தலுக்குக் காரணம் என்று பலர் நம்பி இருந்தனர். நடிகர் திலீப்புக்கு எதிராக பல ஆதாரங்களும் போலீஸாரிடம் சிக்க, நேற்று முன்தினம் போலீஸார், திலீப்பைக் கைது செய்தனர். தற்போது ஆலுவா சப் ஜெயிலில் திலீப் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர், 2 வது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இவர்கள் கேரளாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தனர். நெருங்கிய நட்பு காரணமாகக் கடத்தப்பட்ட நடிகையை திலீப் பினாமியாகவும் பயன் படுத்தி வந்துள்ளார்.

 

நடிகை மஞ்சு வாரியரை நடிகர் திலீப் 1998-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்தனர். இதற்கு காரணம் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனுடன் நெருக்கமாக இருந்ததுதான் என்று சொல்லப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன் நடிகை மஞ்சு வாரியரை ஏடிஜிபி  சந்தியா விசாரணை செய்தார். அப்போது அவர் திலீப்புக்கும் தனக்கும் நடந்த பிரச்னைகளைச் சொல்லியுள்ளார். இந்த நிலையில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் மஞ்சு வாரியரையும் சாட்சியாக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வரும்போது மஞ்சுவாரியரை சாட்சி சொல்ல வைக்க முயற்சி நடந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க