வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (19/07/2017)

கடைசி தொடர்பு:17:03 (19/07/2017)

பெற்றோர் தங்கள் ஆசையைத் திணித்ததால் நடந்த விபரீதம்! பறிபோன மாணவியின் உயிர்

பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்காமல் பெற்றோர்களின் ஆசையால் இன்னும் எத்தனை பிள்ளைகளைப் பறிகொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. ஹாஸ்டலில் படிக்கமாட்டேன் என்று சொல்லிய பிறகும் பெற்றோர் நிர்ப்பந்தப்படுத்தியதால், விஷம் குடித்து இறந்துள்ளார் சிவசங்கரி என்ற மாணவி. அரியலூர் மாவட்டத்தில்தான் இந்தச் சோக சம்பவம் நடந்துள்ளது.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரின் மகள் சிவசங்கரி. இவர் 10-ம் வகுப்பை, துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்துவந்துள்ளார். பின்பு 11-ம் வகுப்பு படிப்பதற்காக மேலமாத்தூரில் உள்ள ராஜவிக்னேஷ் பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்துள்ளனர் பெற்றோர். அங்கு இரண்டுமாதமாக தங்கிப் படித்து வந்தார் சிவசங்கரி. 'ஹாஸ்டலில் சம்பந்தமே இல்லாமல் அடிக்கிறார்கள். சாப்பாடு சரியில்லை. போதிய வசதியில்லை. ஹாஸ்டல் பிடிக்கவில்லை. வீட்டில் இருந்து படிக்கிறேன்' எனப் பெற்றோரிடம் பலமுறை சொல்லியிருக்கிறார் சிவசங்கரி.

இந்நிலையில், அவருடைய பெற்றோர் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி என்ற பள்ளியில் சேர்த்துள்ளனர். இதில் மனவருத்தத்தில் இருந்த சிவசங்கரி, கடந்த 15-ம் தேதியன்று விடுமுறை என்பதால், வீட்டில் கட்டியிருந்த மாடுகளை ஓட்டிக்கொண்டு வயலுக்குச் சென்றார். அங்கு வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதையறிந்த கலியபெருமாள் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைபெற்று மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் இளையராஜாவிடம்கேட்டபோது, "தங்களின் பிள்ளைகளை அந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தால் நல்லா வருவார்களா... இல்லை, இந்தப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தால் நல்ல மார்க் வாங்கி சொசைட்டியில் பெரிய ஆளா வருவார்களா எனப் பெற்றோர்களே திட்டமிட்டுக் கொள்கிறார்களே தவிர, பிள்ளைகளின் விருப்பம் பற்றி கருத்துக் கேட்க மறுக்கிறார்கள். சிவசங்கரியைப் பொறுத்தவரையிலும் பத்தாம் வகுப்பு வரையிலும் ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறார். இங்கு ஹாஸ்டலில் படிக்க வைத்துள்ளனர் அவரின் பெற்றோர். அவர் எண்ணத்துக்கேற்ப செய்யாமல் அவருக்கு முரணாகச் செய்துள்ளார்கள். அவர் கோவத்தின் வெளிப்பாடாய் விஷத்தைக் குடித்து இறந்திருக்கிறார். பெற்றோர்களின் ஆசைகளைப் பிள்ளைகள் மீது திணிப்பது மிகவும் தவறு. நீங்கள் எதைச் சாதித்துவிட்டீர்கள். பின்பு ஏன் உங்கள் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறீர்கள். உங்களைப் போன்றுதானே உங்கள் பிள்ளைகளும் இருப்பார்கள். இதை ஏன் எந்தப் பெற்றோர்களும் நினைத்துப்பார்க்க மறுக்கிறீர்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் படிப்பைப் பற்றி ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதில் உங்கள் குழந்தைக்கு விருப்பம் உள்ளதா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் ஒரு சிவசங்கரி போல் இன்னும் பல சிவசங்கரிகள் இறப்பார்கள்" என்று முடித்தார்.