வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (20/07/2017)

கடைசி தொடர்பு:08:33 (20/07/2017)

“கமல் ஒன்றும் சசிகலா போல ஊழல்வாதி இல்லை!” - கொந்தளிக்கும் இயக்கம்

ஊழல் குறித்து கமல் கருத்து

தொலைக்காட்சி நிகழ்ச்சி கடந்து, தமிழ்நாட்டின் அரசியல்தளத்திலும் பிக்பாஸாக வலம் வருகிறார் நடிகர் கமல்! அரசியல் குறித்து அவர் வெளிப்படுத்தும் கருத்துகளும், அதற்குப் பதிலடியாக வெளிப்படும் கருத்துகளும் அதிரடி கிளப்பி வருகின்றன. இதோ, கடந்த வாரத்தில்,   "தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது" என்று கமல் கொளுத்திப்போட, உடனடியாக கொந்தளித்துவிட்டனர் ஆளும்கட்சியினர்.

"கமல் எல்லாம் ஒரு ஆளே கிடையாது" எனத் தொலைக்காட்சி பேட்டியிலேயே ஒருமையில் குதறினார் அமைச்சர் கே.பி அன்பழகன். நாடாளுமன்ற துணைச் சபாநாயகர் தம்பிதுரையோ, "ஊழல் மலிந்திருக்குன்னா கோர்ட்டுக்குப் போகவேண்டியதுதானே?" (அவர்கள் பார்க்காத கோர்ட்டா!) என்றார். "அவர் முதுகிலேயே ஆயிரத்தெட்டு புளுகு மூட்டை இருக்கு. இதுல எங்களைச் சொல்றாரு. முடிஞ்சா அரசியலுக்கு வந்து பேசட்டும்" என்று கடுகடுத்தார் அமைச்சர் ஜெயக்குமார். அமைச்சர் வேலுமணியோ ஒருபடி மேலே போய், "இதேபோல பேசினால், நாங்களும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசுவோம். தொடர்ந்து ஆட்சியைக் குறைகூறிப் பேசிக்கொண்டே இருந்தால், அவர்மீது அவதூறு வழக்குப் போடுவோம்" என்றார். "மூன்றாம்தர நடிகராகக் கமல் பேசி வருகிறார்" என்றார் அமைச்சர் சி.வி. சண்முகம். அமைச்சர் செல்லூர் ராஜுவோ, "இதெல்லாம் விளம்பரத்துக்காகத்தான் கமல் செய்றாரு" என்கிறார்.

கமலுக்கு ஆதரவாக போராட்டம்

கமலுக்கு ஆளும்கட்சியிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது என்றால், எதிர்கட்சிகளிடமிருந்தோ ஆதரவு பெருகியது. தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின், " ஒருவர் விமர்சனம் செய்தால், அதில் உள்ள உண்மைத்தன்மையை உணர்ந்து அந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் ஆட்சி. அதைவிடுத்து கமல் மீது வன்மம் காட்டுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல" என்றார். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், "அனைவருக்கும் உள்ள உரிமை நடிகர் கமலுக்கு இல்லையா? அரசை விமர்சித்தார் என்பதற்காக அமைச்சரே கமல் மீது வழக்கு போடுவோம் எனக் கூறியிருப்பது மக்களாட்சி தத்துவத்துக்கே எதிரானது" என்றார் கோபமாக. இப்படி எதிரும் புதிருமான கருத்து மோதல்களுக்கிடையே, கமலுக்கு ஆதரவாக நேரடியாகக் களத்தில் குதித்துள்ளது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். கமலுக்குஎஸ்.பாலா- இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் ஆதரவாக தமிழக அமைச்சர்களைக் கண்டித்து, குளித்தலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதன், மாநிலச் செயலாளர் எஸ்.பாலாவிடம் பேசினோம்.

“மக்களின் குரலையே கமல் தமது கருத்தாக வெளிப்படுத்தினார். இந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஒரு விஷயத்தையாவது நீங்கள் காட்டமுடியுமா? ஆர்.கே நகர் தேர்தலில் இவர்கள் செய்த ஊழல் ஒட்டுமொத்த நாட்டு மக்கள் முன்பும் வெளிப்பட்டதே. குட்கா விவகாரத்தில், குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளது. 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக அமைச்சர் சரோஜா மீது குற்றச்சாட்டு உள்ளது.

கூவத்தூரில், எம்எல்ஏ-க்களுக்குப் பணம் தந்ததாக வீடியோவே வெளியானதே. ஏன், இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, நாட்டுக்காகவோ, கொள்கைக்காகவோ போராடியா உள்ளே சென்றார்? சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக் கைதியானவர் அவர். ஊழலின் மொத்த உருவமாக வெளிப்படுகிறது இன்றைய அவர்களின் ஆட்சி. சசிகலா செய்ததையா கமல் செய்தார்? அவர் ஒன்றும் சசிகலா போல ஊழல்வாதியில்லை. கமல், ஊழல் ஆட்சியை விமர்சித்து கருத்து வெளியிட்ட ஒரே காரணத்துக்காக, அவரைத் தரக்குறைவாகப் பேசுவதும் மிரட்டுவதும் சரியல்ல. இதேபோல், மக்கள் நலனுக்காக ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய தோழர் வளர்மதி மீது குண்டர் சட்டம் ஏவுவதும் நாகரிகமான அரசின் செயலல்ல. ஊழல் குறித்தான குற்றச்சாட்டை நியாயமாக விசாரித்து குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தி  தண்டிப்பதே சரியான அரசு செய்ய வேண்டிய கடமையாகும். இதைவிடுத்து, கருத்து சொல்பவர்களை எல்லாம் மிரட்டிக்கொண்டே இருந்தால், இந்த ஊழல் ஆட்சிக்கு எதிரான எங்கள் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்" என்றார் உறுதியான குரலில்.

“கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்' என்று பாடினார் கமல். அவர் வெளிப்படுத்தும் கருத்துகளும்கூட அவரை, அந்த வடிவத்திலேயே பிரதிபலிக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்