வெளியிடப்பட்ட நேரம்: 23:16 (19/07/2017)

கடைசி தொடர்பு:23:16 (19/07/2017)

பள்ளிக்கல்வி பாடத்திட்டங்களை வடிவமைக்கக் கூடுகிறது நிபுணர்குழு!

பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு முன்பு என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதைக் குறித்து விவாதிக்கவும் மாற்றத்திற்கான வரைமுறையை உருவாக்கவும் முனைப்போடு இருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. இதற்காக அண்மையில் தமிழகப் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் பத்து பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வி


நிபுணர்கள் குழு அமைத்ததோடு, முதற்கட்டமாக பல்வேறு தரப்பினரின் ஆலோசனைக் கேட்டறிய சென்னையில் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. இந்த நிகழ்ச்சி மூன்று நாள்கள் நடைபெற இருக்கிறது. முதல்நாள் நிகழ்ச்சி நாளை சென்னை கலைவாணர் அரங்கத்திலும், அடுத்த இரண்டு நாள்களுக்கான நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் என்.சி.இ.ஆர்.டி, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும் வல்லுநர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், துறை வல்லுநர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க இருக்கிறார்கள். 

தமிழ்நாடு மாநிலக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்கிறது. இது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க 22 துணைக் குழுக்களை அமைத்துள்ளது. இந்தத் துணைக்குழுவில் தமிழ்நாடு பாடத்திட்டத்தை சார்ந்த ஆசிரியர்களும், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களும் இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்களும் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள்.