வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (20/07/2017)

கடைசி தொடர்பு:10:11 (20/07/2017)

‘ட்விட்டரும் ஃபேஸ்புக்கும்தான் உலகமா? இப்ப நிம்மதியா இருக்கேன்!’ - குஷ்பு

குஷ்பு ட்விட்டரில் இருந்து தற்காலிக வெளியேற்றம். பிக்பாஸ் பரபரப்புகளுக்கும் இடையிலும் சோசியல் மீடியாவில் அடிபட்ட டாபிக். திமுகவில் அவருக்கு எதிராக நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடங்கி எதுவென்றாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக குஷ்பு முதல் ஆளாக ட்விட்டரில் கருத்துச் சொல்லிவிடுவார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவர் எழுதிய போது பீட்டா அமைப்பு குஷ்புவிடம் இதே ட்விட்டரில்தான் மோதியது. கடைசியாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும் குஷ்புவும் வாதம் செய்து கொண்டனர்.  இந்நிலையில் குஷ்பு அவர்களிடம் பேசினோம்.

குஷ்பு

"இது ரொம்ப சாதாரணமான முடிவுதான்.  ஏன் இந்த முடிவு என்றால், நான் ட்விட்டருக்கு அடிக்‌ட் ஆகிட்டேன். காலையில் எழுந்தவுடனே முதல் வேலையா மொபைலைக் கையில் எடுத்து எத்தனை நோட்டிபிகேஷன் வந்திருக்கு, யார் என்ன ட்விட் எழுதியிருக்காங்கன்னு பார்க்கிற அளவு அடிக்ட் ஆகிட்டேன். இதனால் என் குடும்பத்துடன் செலவளிக்கும் நேரம் குறைஞ்சிட்டே போகுது. இதுக்கு முன்னாடி எனக்குக் கோயில் எல்லாம் கட்டினாங்க. அப்ப சோசியல் மீடியா இல்லை. அரசியல் கட்சிகளும் இந்த சோசியல் மீடியாவை நம்பி ஆரம்பிக்கப்படவில்லை. அவங்க அவங்க கட்சிக்கு என்று இருக்கக்கூடிய கொள்கைகளை நம்பித்தான் ஆரம்பிச்சாங்க.

அதேபோல் கட்சிகளில் இருக்கும் தொண்டர்கள் யாரும் அந்தந்தக் கட்சிகளின் சோசியல் மீடியாக்களை நம்பி அந்தக் கட்சிகளில் சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு வீட்டில் அஞ்சு பேரு அறையில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் அஞ்சு பேரின் கைகளிலும் மொபைல் போனை வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கிட்ட அப்படியான பழக்கம் வந்திடுச்சு. குழந்தைகளுடன் டைனிங் டேபிளில் இருக்கும் போது ‛கையில் மொபைல் போன் வெச்சு செக் செய்யாதீங்க’-ன்னு சொல்லுற நானே அப்பப்போ நோட்டிபிக்கேஷன் செக் பண்ணிட்டு இருப்பேன்.

என் பிள்ளைகளுக்குப் புத்தி சொல்லும் நான், முதலில் அதுக்குத் தயாராக இருக்கவேண்டும். போதைக்கு அடிமையானது போல்தான் நான் ட்விட்டரில் இருந்தேன். அதனால்தான் அதிலிருந்து வெளியே வந்துட்டேன்.முன்னாடியெல்லாம் நிறையப் புத்தகங்கள் படிப்பேன், இப்ப புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாமல் போயிட்ட மாதிரி உணர்றேன். இப்ப இரண்டு நாள்களாக நிறைய டைம் கிடைப்பதா தெரியுது. உண்மையில் இது நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன். அது மாதிரி ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் போதும் நான் எந்தப் பந்தாவும் இல்லாமல் ஒரு பப்ளிக் மாதிரிதான் நடந்துக்குவேன். யாராவது ஒருத்தர் காலை வணக்கம் சொன்னாலும் மறக்காமல் திரும்பவும் வணக்கம் சொல்லுவேன். அது மட்டுமில்லாமல் கேள்வி கேட்டால் பதில் சொல்வது, தேவையே இல்லாமல் திட்டினால் அதுக்கும் சரியான பதிலடி கொடுப்பது என  ஒரு டிபிகல் ட்விட்டராகத்தான் இருந்தேன்.  நான் மட்டும் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ட்விட்களுக்கு மேலே எழுதியிருப்பேன்னா பாருங்கள், எவ்வளவு நேரம் அதில் செலவு செய்திருக்கிறேன்" என்றவரிடம்

 "பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையுடன் எல்லாம் ட்விட்டரிலேயே அரசியல் கருத்து மோதல் செய்தீர்களே..இனி அது நடக்காதே?" என்று கேட்டதற்கு, "ட்விட்டரும் ஃபேஸ்புக்கும்தான் உலகமா... உங்களைப் போன்ற ஊடகங்களின் மூலம் என் அரசியல் கருத்துகளை, கட்சியின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வேன்" என்றார். 

" எவ்வளவு நாளைக்கு இந்த சோசியல் மீடியா துறவறம்?" என்று கேட்டதற்கு, "தெரியலை. ஆனால் என் மொபைலில் இருந்து ட்விட்டர் ஆப்பை டெலிட் செஞ்சுட்டேன். இப்போதைக்கு ஒரே ஒரு விஷயம், என்னால நிம்மதியாக இருக்க முடியுது. நிறையப் படிக்கிற வேலை இருக்கு. அதைச் செய்யப்போகிறேன்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்