''சசிகலா வீடியோ உண்மையானது''- போலீஸ் டிஐஜி.,ரூபா

பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகள்குறித்து உயர்மட்டக் குழு விசாரணைக்குக் கடந்த 13-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த 17-ம் தேதி, தலைமைச் செயலாளர் சுபாஷ் சந்திரகுந்தியாவைச் சந்தித்துப் பேசினார். நேற்று மாலை,பெங்களூரு சிறைக்கு  விசாரணை அதிகாரி வினய்குமார் சென்றார். வரவேற்பு அறை முதல் அங்கு குறிப்பிட்ட சில இடங்களை ஆய்வுசெய்தார். ஏற்கெனவே சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா, சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். தொடர்ந்து, சசிகலா பற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின.

டிஐஜி ரூபா


இந்நிலையில், போலீஸ் டிஐஜி ரூபா நேற்று அளித்த பேட்டியில், ''சிறைக்குச் சென்று சோதனைசெய்யும்படி என்னை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை. அதெல்லாம் என்னிடம் முடியாது. சிறை மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களைப் போதையில் இருந்த சில கைதிகள் தாக்கினர் என்று தகவல் கிடைத்தது. எனவே, சிறைக்குச் சென்று சோதனை நடத்தினேன். அந்தச் சோதனையின்போது பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. அதைத்தான் அறிக்கையாக சிறைத்துறை டிஜிபி-க்கு அனுப்பிவைத்தேன். அந்த அறிக்கை ரகசியமான ஒன்று. அதுபற்றி வெளிப்படையாகப் பேச முடியாது. சிறையில் சசிகலா கைப்பையுடன் இருப்பதுபோல வெளியாகியுள்ள வீடியோ உண்மையானதுதான்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!