வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (20/07/2017)

கடைசி தொடர்பு:12:11 (20/07/2017)

சீரியலோ சினிமாவோ... தொலைக்காட்சியின் பிக் பாஸ் டீ.ஆர்.பி தான்! #HowTRPworks

தொலைக்காட்சி

பத்து வருடங்களுக்கு முன் வந்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று. ”சச்சின் ஒரு நிமிடத்தில் ரூ.1,163 சம்பாதிக்கிறார். ஷாருக்கான் ஒரு நிமிடத்தில் ரூ.1,430 சம்பாதிக்கிறார்.  இந்திரா நூயி ஒரு நிமிடத்தில் ரூ.2,911  சம்பாதிக்கிறார். எனவே பெண் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்” என்று சொல்கிற விழிப்புஉணர்வு விளம்பரம் அது. இன்னொரு விளம்பரம் “ உங்களின் 24 மணி நேரத்தில் நாங்கள் வெறும் 2 நிமிடங்களை மட்டுமே  கேட்கிறோம்” என முடிகிற  நூடுல்ஸ் விளம்பரம். மேலே சொல்லப்பட்டிருக்கிற நிமிடத்திற்கும், விளம்பரத்திற்கும், ஏன் நமக்கும் கூட  ஒரு தொடர்பு இருந்துக் கொண்டே இருக்கிறது.  அந்தத் தொடர்பின் பெயர் “டிஆர்பி” (TRP)  TELEVISION  RATING POINT.

இந்தியா முழுவதும் தொலைக்காட்சி உலகத்தில் டிஆர்பி என்கிற மறைமுகப் போர் ஒன்று தினமும் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது . டிஆர்பி என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஒரு சில உதாரணங்களை நீங்களே முதலில் யூகித்துக் கொள்ளுங்கள். தினமும் வந்து   கொண்டிருக்கிற  ஒரு தொடரில்  ஒரு  கதாபாத்திரம் கொல்லப்படலாம். புதிதாக ஒரு கதாபாத்திரம்  தொடரில் அறிமுகமாகலாம். தொடரோ, நிகழ்ச்சியோ அதன்  இயக்குநர் மாற்றப்படலாம். திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி ஒரு தொடர் நிறுத்தப்படலாம். புதிதாக ஒரு தொடர் அந்த இடத்திற்கு  வரலாம். அஜித், விஜய் ரசிகர்கள்  சண்டைக்குக் காரணமாய் இருக்கலாம். “பிரேக்கிங் நியூஸ்” என்கிற முக்கியச் செய்திகளுக்கு” தீம் மியூசிக் ஒன்றைப் புதிதாகக் கொண்டுவரலாம். உங்களின் ஆஸ்தான செய்தி வாசிப்பாளர் இன்னொரு தொலைக்காட்சிக்கு மாறி விடலாம். வதந்தி என்கிற ஒன்றை செய்தி எனச் சொல்லி மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கலாம். இப்படி அனேக மாற்றங்களை டிஆர்பி என்ற ஒன்று தினம் தினம்  நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.  

டிஆர்பி தொலைக்காட்சி

எப்படிக் கணக்கிடுகிறார்கள்?

டிஆர்பி கணக்கிடும் நிறுவனம் ஐம்பது வீடுகள் இருக்கிற பகுதியில் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்து  “மக்கள் மீட்டர்” என்கிற கருவியைப் பொருத்தும் .அதாவது அந்த வீட்டில் தினமும் பார்க்கப்படுகிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளை அந்தக் கருவி பதிவு செய்து கொள்ளும். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பகுதிகளிலும் மக்கள் மீட்டரைப் பொறுத்திவிடுவார்கள். இந்த மக்கள் மீட்டரில் பதிவாகும் தகவலை வைத்து ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் டீஆர்பி எடுக்கிறார்கள். உதாரணத்துக்கு, 7 மணியிலிருந்து 7 30 மணி வரை  ஒளிபரப்பாகிற எந்தத் தொலைக்காட்சியின்  நிகழ்ச்சியை மக்கள் அதிகம் பார்த்திருக்கிறார்கள் என்பதை எல்லா கருவிகளிலும் பதிவாகி இருக்கிற தகவல்களைக் கொண்டு அளவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பான  அனைத்துத் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளையும் புள்ளிகளின் அடிப்படையில் பிரித்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்  வெளியிடுவார்கள். அதுவே டிஆர்பி ரேட்டிங்.

தொலைக்காட்சி நிறுவனங்களைப் பொறுத்தவரை அது வியாழக்கிழமை அல்ல வியாபாரக் கிழமை. ரேட்டிங்கில் முதலிடம் வருவது என்பது மட்டும்தான் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் இலக்கு. ஜெயிக்கிற குதிரைக்குத்தான் பணம் கட்டுவார்கள் என்கிற கதையேதான் இதிலும். டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிதான் அடுத்து வர இருக்கிற வாரத்தின் குறிப்பிட்ட நேரத்தின் விளம்பர வருவாயின்  சக்கரவர்த்தி. அந்த நிகழ்ச்சிக்குப் பணத்தை அள்ளித் தர எல்லா விளம்பர நிறுவனங்களும் தயாராக இருப்பார்கள். இப்படி ஒவ்வோர் அரை மணி நேரத்திற்கும் தொலைக்காட்சிகளின் ரேட்டிங் என்பது மாறிக்கொண்டே இருக்கும்.

டிஆர்பி

இது குறித்து ஊடகத்துறையில் பணியாற்றும் விஸ்வநாத் அவர்களிடம் பேசியதில். “இந்தியாவில் டிஆர்பி அளவீடுகள் என்பது இன்னமும் வளர்ந்து வருகிற ஒன்றுதான். இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை. கேபிள் வழி  ஒளிபரப்பை மட்டுமே கொண்டு  டிஆர்பி என்பது அளவிடப்படுகிறது. செயற்கைகோள் ஒளிபரப்பான D2H ஒளிபரப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இன்றைய  காலகட்டத்தில் ஆன்லைனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும்  அதிகரித்து கொண்டே இருக்கிறது. உண்மையான டிஆர்பி என்பது இன்னும் கண்டறியப்படாத ஒன்றாகத்தான் இருக்கிறது. வீடுகளில் இருக்கிற செட் டாப் பாக்ஸ்கள்  அனைத்தும்  இணையத்தோடு இணைக்கப்பட்டால் மட்டுமே உண்மையான டிஆர்பி அளவீடு தெரியவரும். இந்தியா போன்ற நாடுகளில் டிஆர்பி அளவீடுகளில் அதிக முறைகேடுகள் இருக்கின்றன. மக்கள் மீட்டர் பொருத்தியிருக்கிற வீடுகள் பற்றிய தகவல் அந்தப் பகுதியின் கேபிள் அப்பரேட்டருக்குத் தெரியும். அவர் ஏதாவது ஒரு நிறுவனத்தோடு சேர்த்துக் கொண்டு மீட்டர் பொருத்திய வீடுகளில் பணம் கொடுத்து அல்லது அந்த வீடுகளில்  வேறு ஒரு டிவியை பொருத்தி ஒரே தொலைக்காட்சியை ஓட  வைத்து  டிஆர்பி  அளவீடுகளில்  முறைகேடு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. பொழுதுபோக்கு சேனல்கள், செய்தி சேனல்கள் என டிஆர்பியை தனித் தனியாகத்தான் அளவிடுவார்கள். சென்னை போன்ற பெருநகரங்களுக்குத் தனிப் பட்டியலும், தமிழ்நாட்டிற்கு தனிப் பட்டியலும் எனப் பிரித்துதான் ரேட்டிங் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள்” என்கிறார்.

ப்ரைம் டைம்தான் தொலைக்காட்சி நிறுவனங்களின் கல்லாப்பெட்டி.  மாலை 7 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை மூன்று மணி நேரம் என்பது  ப்ரைம் டைம். அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி  மாணவர்கள் என எல்லோருமே 7 மணி அளவில் வீடு திரும்பி இருப்பார்கள். அந்த நேரங்களில் எல்லோருடைய வீடுகளிலும் தொலைக்காட்சி என்பது ஓடிக் கொண்டிருக்கும். அந்த நேரமே ப்ரைம் டைம் எனப்படுகிறது. அத்தகைய நேரங்களில் ஒளிபரப்பாகிற விளம்பரங்களுக்கு பல மடங்கு கட்டணத்தை தொலைக்காட்சி நிறுவனங்கள் வசூலிக்கின்றன. நிறையப் பேரை சென்று சேரும் என்பதால் இந்த விலை.

அஜித், விஜய் ரசிகர்களின் சண்டைக்குக் கூட  டிஆர்பி  காரணமாய் இருந்திருக்கிறது.  சன் டிவியில் நடிகர்  அஜித் நடித்த  “வீரம்” படம் ஒளிபரப்பான தினம்  விஜய் டிவி  “விஜய் விருதுகள்” நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியது.  அதில் நடிகர்  விஜய் அந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருதைப் பெறுகிறார். இந்த இரண்டு சேனல்களில் எந்த நிகழ்ச்சி  அதிக டிஆர்பி பெறும் என ட்விட்டரில் ஆரம்பித்தது  சண்டை. ஹேஷ் டேக்குகள் இரு தரப்பிலும் பறந்தன. அடுத்த வியாழக்கிழமை டிஆர்பி வெளியானது.  நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தின் அடிப்படையில் சென்னையில்  சன் டி.விக்கு 11  புள்ளிகளும், விஜய் டி.விக்கு 10 புள்ளிகளும் கிடைத்திருந்தன. தமிழ்நாடு அளவில் விஜய் டி.விக்கு டி.ஆர்.பியில் 10 புள்ளிகளும், சன் டி.விக்கு 9 புள்ளிகளும் கிடைத்திருந்தன. இப்படி ட்விட்டரில் ஆரம்பித்த சண்டை அடுத்த வார டிஆர்பியில்தான் முடிவுக்கு வந்தது.

விளம்பரம் அதிகமாய் இருக்கிற நிகழ்ச்சியையோ ஒரு தொடரையோ கவனித்துப் பாருங்கள் ஒவ்வொரு விளம்பர இடைவெளிக்கும்  ஒரு ட்விஸ்ட் இருக்கும். தொடரின்  இறுதிக்கு இன்னும் செம ட்விஸ்ட் எனத் தொடரே  ட்விஸ்ட்டுகளில்தான் போய்க்கொண்டிருக்கும். பார்வையாளர்களைத் தக்கவைக்க தொலைக்காட்சிகள் செய்கிற வித்தைகளில் ஒன்றுதான் அந்த ட்விஸ்ட்.  “என்னடா எப்பப் பாத்தாலும் ஒரு பதட்டத்துலயே வச்சுருக்கீங்க” என்கிற வடிவேலுவின் டயலாக்குக்கு பின்னால் இருப்பது கூட டிஆர்பிதான். 

நம்மை வைத்து நமக்கே தெரியாமல் நடக்கிற ஒரு சந்தைக்கு நாம்தான் முக்கியக் காரணியாய்  இருக்கிறோம். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு போனதற்கும் ,கமல் தொலைக்காட்சிக்கு வந்ததற்கும் கூட காரணம்  டிஆர்பி தான்.


டிரெண்டிங் @ விகடன்