வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (20/07/2017)

கடைசி தொடர்பு:11:06 (20/07/2017)

வைகை வறண்டதால், செல்லம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் முடங்கியது!

நீண்ட காலத்துக்குப் பிறகு வைகை வறண்டு, நிலத்தடி நீர் ஆதாரமும் இல்லாமல் போனதால், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பயனடைந்து வந்த 99 கிராமங்களுக்குக் குடிநீர் நிறுத்தப்பட்டு அத்தனை கிராமத்து மக்களும் குடிநீருக்காகக்   கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

vaigai
 

செல்லம்பட்டி வட்டாரத்திலுள்ள கிராமங்களுக்குக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மன்னாடிமங்கலம் அருகே வைகை ஆற்றில் கிணறு தோண்டி செல்லம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் விக்கிறமங்கலம்,கொடிக்குளம், பன்னியான், கோவிலாங்குளம், கண்ணனூர், கருகப்பிள்ளை, செல்லம்பட்டி, வலங்காகுளம், குப்பணம்பட்டி, மேட்டுப்பட்டி, தாழையூத்துப்பட்டி உட்பட 99 கிராமங்கள் பயனடைந்து வந்தன. பருவ மழை தொடர்ந்து பெய்யாததாலும், வைகை வறண்டதாலும் கடந்த ஆறு மாதமாக செல்லம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் குடிநீருக்காகப் பல மைல் தூரம் அலைகிறார்கள். பணம் கொடுத்துத் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டால், இயற்கை செய்த சதிக்கு நாங்கள் என்ன செய்ய முடியும், மாற்று ஏற்படாக வேறு இடங்களில் தண்ணீர் எடுத்து வந்து, முடிந்த அளவு மக்களுக்கு விநியோகித்து வருகிறோம் என்கிறார்கள். 

இனி வைகையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினால்தான் செல்லம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படும் என்று சொல்லப்படுகிறது. 99 கிராம மக்களும் குடிநீருக்காக அலைவதைத் தடுக்க முடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் உள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க