வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (20/07/2017)

கடைசி தொடர்பு:10:59 (20/07/2017)

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுங்கள்! - தமிழக, கர்நாடகத் தலைமைச் செயலாளர்களுக்குக் கோரிக்கை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்ற கர்நாடக, தமிழகத் தலைமைச் செயலாளர்களுக்குச் சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். தமிழக அ.தி.மு.க அம்மா அணியினர் அடிக்கடி அங்கு சென்று சந்தித்து வந்தனர். துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் அவ்வப்போது சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

இந்நிலையில், சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குநர் புகழேந்தி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சசிகலா உட்பட மூவரையும் தமிழகச் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.  மேலும், 'சிறை விதிகளின்படி, சிறைத்தண்டனை பெற்றுவரும் ஒருவர், தனது சொந்த ஊரின் அருகே இருக்கும் சிறையிலும் தண்டனையை அனுபவிக்கலாம். அதன் மூலம் அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் உரையாடவும் எளிமையாக இருக்கும். இதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. இது அனைத்து கைதிகளுக்கும் பொருந்தும்' என்று கூறப்பட்டுள்ளது.