வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (20/07/2017)

கடைசி தொடர்பு:17:09 (23/07/2018)

மோடியின் வருகைக்காகத் தயாராகும் ராமேஸ்வரம்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாள் ஜூலை 27-ல் கடைப்பிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம், ராமேஸ்வரம் அருகே கட்டப்பட்டுவரும் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார்.

kalam memorial

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டுவரும் இந்த நினைவிடத்தில், மறைந்த கலாம் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது நினைவிடத்தை மிகச் சிறப்பாக அமைத்து வருகின்றனர்.  கலாம் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், அவரது நினைவிடத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. முதல்கட்டமாக, கலாம் பயன்படுத்திய புத்தகங்களைக்கொண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, அறிவுசார் மையம், கோளரங்கம் எனப் பல வசதிகளை இங்கு ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. கலாமின் கண்டுபிடிப்பான 'அக்னி' ஏவுகணையின் மாதிரி இங்கே நிறுவப்பட்டுள்ளது.

rameswaram

 இதைத் திறந்துவைப்பதற்காக ராமேஸ்வரம் வர உள்ள மோடியை வரவேற்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன சிறப்பு ஹெலிகாப்டரில் மண்டபத்துக்கு வரும் மோடி, அங்கிருந்து கார் மூலம் கலாம் நினைவிடத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள சாலையின் இரு பகுதிகளிலும் குப்பைகள், புதர்களை அகற்றும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முக்கிய வீதிகளில் உள்ள தெரு விளக்குகளைப் பழுதுபார்த்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கென, தென் மாவட்டங்களில் உள்ள 13 நகராட்சிகளைச் சேர்ந்த பணியாளர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களுடன் ராமேஸ்வரம் நகராட்சி, தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சிப் பணியாளர்களும் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.