வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (20/07/2017)

கடைசி தொடர்பு:12:13 (20/07/2017)

ரஜினி, கமலுக்கு தி.மு.க. திடீர் அழைப்பு!

முரசொலி நாளிதழ் பவள விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. இதில் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதியாகிவிட்டது. ரஜினிகாந்த் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அறிவாலய வட்டாரம் தெரிவிக்கிறது.

"அரசியலில் சிஸ்டம் சரியில்லை" என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த். இந்தப் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்களிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பின. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் ஊழல் நடப்பதாக'க் கூறி அதிரவைத்தார் கமல்ஹாசன்.

கமலின் இந்தப் பேச்சுக்கு, அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். "தி.மு.க-வின் ஊதுகுழலாக கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார்" என்று குற்றம்சாட்டினர். பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார். இவருக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் நேற்று அதிரடியாகப் பதிலளித்தார் கமல்ஹாசன். "தம்பி ஜெயக்குமார் என்றும், எலும்பு வல்லுநர் ராஜா" என்றும் பதிலடி கொடுத்தார் கமல்.

இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் முரசொலி நாளிதழ் பவள விழா, ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான விழா அழைப்பிதழ், முக்கிய அரசியல் தலைவர்களுக்கு தி.மு.க. சார்பில் அனுப்பப்பட்டுவருகிறது. அதேபோல நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் விழா அமைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதியாகிவிட்டது என்றும் ரஜினிகாந்த் பங்கேற்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றும் அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.