வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (20/07/2017)

கடைசி தொடர்பு:12:05 (20/07/2017)

’அ.தி.மு.க. அரசை நம்புவது, ஆடு கசாப்புக் கடைக்காரரை நம்புவதற்குச் சமம்’ ... பால் முகவர்கள் சங்கம் சாடல்!

 

milk

"அ.தி.மு.க. அரசை நம்புவது, தன் உயிரைக் காப்பாற்றுவார் என்று ஆடு கசாப்புக் கடைக்காரரை நம்புவதற்குச் சமம்" என்று குபீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறது தமிழ்நாடு பால் முகவர்கள் தாெழிலாளர்கள் நலச் சங்கம். அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி, அது சம்பந்தமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

 " 'பாலில் கலப்படத்தைத் தடுப்பதற்காக அந்தந்த மாநில அரசுகள் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கடந்த 2013, 2014-ம் ஆண்டுகளில் இடைக்கால உத்தரவாகவும், 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இறுதி உத்தரவாகவும் பிறப்பித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், எங்களது பால் முகவர்கள் சங்கம் சார்பில், கடந்த 2012- ம் ஆண்டு முதல் தற்போது வரை கலப்பட பால் நிறுவனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளைத் தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், பால்வளத்துறைச் செயலாளர் மற்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்குச் சுமார் பத்துக்கும் மேற்பட்ட முறை மனுவாக அளித்திருக்கிறோம். ஆனால்,உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல், மக்கள் நலன் சார்ந்த எங்களின் சங்கத்தின் கோரிக்கைகளையும் கவனத்தில்கொள்ளாமல் அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கிறது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், பால் கலப்படம்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அவரது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றம் வாய்ப்பூட்டு போட்டதையும் தமிழக மக்கள் மட்டுமன்றி அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசும் நன்கறியும். இந்தச் சூழ்நிலையில், தற்போது நடந்து முடிந்திருக்கும் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே மக்கள் நலன் சார்ந்து கலப்பட பால் நிறுவனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, பால் கலப்பட சிறப்புத் தடைச்சட்டம் கொண்டு வரப்படும் என மிகுந்த நம்பிக்கையோடு இருந்த 7.5கோடி மக்களை, எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஏமாற்றியதோடு, இது மக்களுக்கான அரசு இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. 

மக்கள் உயிரைக் கொல்லும் மது விற்பனைக்கு முக்கியத்துவம் தரும் அ.தி.மு.க. அரசிடமிருந்து மக்கள் தங்களது நலனை எதிர்பார்ப்பது என்பது, கசாப்புக் கடைக்காரர் தன் உயிரைக் காப்பாற்றுவார் என ஆடு நம்புவதற்குச் சமம்.

பால் கலப்பட விவகாரத்தில், உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து, தமிழக அரசு உடனடியாக பால் கலப்பட சிறப்புத் தடைச்சட்டம் இயற்றிட உத்தரவிட வேண்டும். மேலும், கிரானைட் முறைகேடுகள்குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி மரியாதைக்குரிய திரு.சகாயம் அவர்கள் தலைமையில், பால் கலப்படத்தைத் தடுக்க அதிரடிப்படை நிபுணர் குழு அமைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என்று பாய்ச்சல் காட்டியிருக்கிறார்.