வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (20/07/2017)

கடைசி தொடர்பு:11:56 (20/07/2017)

மது பாட்டில்களால் தீப்பிடித்த கார்... தப்பியோடிய கடத்தல்காரர்!

புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களைக் கடத்திச் சென்ற கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

புதுச்சேரி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் இருக்கின்றது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புளிச்சப்பள்ளம் கிராமம். இந்தப் பகுதியில் இருக்கும் மேம்பாலத்தில் இன்று மதியம் கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் வானூர் காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாகக் காட்சியளித்தது.

தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் கார் தீப்பிடித்ததும் ஒட்டுநர் இறங்கி தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது. சந்தேகமடைந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த காரை சோதனை செய்தனர். அப்போது இஞ்சின் அமைந்துள்ள பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உயர் ரக மதுபாட்டில்களை மறைத்துக் கடத்தியது தெரிய வந்தது. காரின் இஞ்சின் வெப்பத்தினால் மதுபாட்டில்கள் தீப்பிடித்து வெடித்தாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களைக் கடத்துவது அதிகரித்துவிட்டது. இப்படி மதுபாட்டில்களைக் கடத்துவதற்கு கடத்தல்காரர்கள் பழைய கார்களையே பயன்படுத்துவதும், போலீசில் சிக்கினால் ஓட்டுநர் மாயமாவதும் வழக்கமானதாகி வருகின்றது. இந்த சம்பவத்திலும் அதுதான் அரங்கேறியிருக்கின்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க