வீட்டில் புகுந்து பெண்ணை சித்ரவதை செய்த போலீஸ்! விருத்தாசலத்தில் அதிர்ச்சி சம்பவம்


வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவரை போலீஸார் அடித்து உதைத்து சித்ரவதை செய்த விவகாரம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அருகேயுள்ள ஆண்டிமரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளிக்கண்ணன். இவரது மகள் கோமதி. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார் கோமதி. அப்போது. வீட்டிற்குள் புகுந்த போலீஸார், கோமதியை அடித்து, உதைத்து, காருக்குள் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள், கடலூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து மனித உரிமை ஆர்வலர்களிடம் பேசும்போது, "வெள்ளிக்கண்ணனுடைய தூரத்து உறவினர் ஒருவர் மீது மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் திருட்டு சம்பந்தமாக புகார் ஒன்று இருக்கிறது. அந்த புகார் தொடர்பான வழக்கை வெள்ளிகண்ணனை ஏற்கச் சொல்லி கடந்த மூன்று வருடமாக வெள்ளிக்கண்ணனையும் அவர் குடும்பத்தாரையும் அடித்து மிரட்டி, அவர் வீட்டையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள் மேல்மருவத்தூர் போலீஸார். இது தொடர்பாகக் கடந்த 2016-ம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 17-ம் தேதி வெள்ளிக்கண்ணு வீட்டுக்கு வந்த நான்கு போலீஸார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த கோமதியை பிடித்து உங்க அப்பா எங்கன்னு கேட்டு அடித்து, உதைத்து, காரில் வைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். அவருடைய சின்ன மகன் அதைப் பார்த்ததால் அந்தப் பெண்ணின் உயிர் இப்போது தப்பித்துள்ளது. இது புதுசா நடக்கிற விஷயம் இல்லை. இந்த பகுதி மக்கள் திருடர்கள் என்று முத்திரை குத்தி  மீது பொய் வழக்கு போடுவதுதான் போலீஸின் குணம். இவர்கள் தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன" என்றார்.

இப்புகார் குறித்து கடலூர் எஸ்.பி. விஜயகுமார், "புகாரை காஞ்சிபுரம் எஸ்.பி.க்கு அனுப்பியுள்ளோம். அத்துடன் திட்டக்குடி டி.எஸ்.பி. லிமிட் என்பதால் அவர்களையும் விசாரிக்க சொல்லியிருக்கிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!