ஓலைச்சுவடி, கல்வெட்டில் இருப்பதை படிக்க வேண்டுமா.. அப்போ கங்கைகொண்டசோழபுரத்துக்கு வாங்க!

தமிழ் பிராமி எழுத்துகள், அபுகிடா, கிரந்த, தமிழ் வட்ட எழுத்துகளைப் படிக்கத் தெரிந்துகொள்ள வேண்டுமா அப்போ கங்கைகொண்ட சோழபுரம் வாங்க. 

 


தமிழ் சமூகத்தின் அடையாளமே ஓலைச்சுவடிகளும், கல்வெட்டுகளும்தான். அந்த வகையில் நம் கோயில் கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை நம்மில் எத்தனை பேருக்குப் படிக்கத் தெரியும். கல்வெட்டுகளையும் வரலாற்று ஆய்வுகளையும் படிக்கத் தெரிந்துகொள்வதற்காக கங்கைகொண்டசோழபுரத்தில் பழங்கால கல்வெட்டு பயிற்சி வகுப்பு துவங்கியது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகராக விளங்கியது. இங்கு அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் சோழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் தொன்மையான வரலாறுகள் அடங்கிய கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் பொருள்களைப் பாதுகாக்கும் வகையில் தொல்லியியல் துறை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆர்வலர்களுக்கான நான்கு நாள்கள் பயிற்சி நடைபெற்று வருகிறது. 

 


இதில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள், ஸ்ரீவில்லிப்புத்தூர், நாகப்பட்டினம், மதுரை மற்றும் பெங்களூர் போன்ற மாவட்டங்களிலிருந்து 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், வரலாற்று ஆர்வலர்களும் பலர் கலந்துகொண்டனர், இந்தப் பயிற்சி வகுப்பில் பழங்காலத்தில் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துகள், கிரந்த எழுத்துகள் மற்றும் தமிழ் வட்ட எழுத்துகளைப் படிப்பதற்கான பயிற்சியும் கல்வெட்டு படியெடுத்தல் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது, இறுதியில் கங்கைகொண்டசோழபுரம் கோயில் சுவற்றில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு எழுத்துகளைப் படிக்கும் நேரடிப் பயிற்சியும் நடக்க இருக்கிறது, இதில் கலந்துகொண்டவர்களுக்கு முனைவர் ராஜகோபாலன் கல்வெட்டு எழுத்து பற்றியும், முனைவர் தியாகராஜன் கல்வெட்டு வரலாறு பற்றியும், முனைவர் செல்வகுமார் அகழ்வாராய்ச்சி பற்றியும் வகுப்பெடுத்தனர், பயிற்சி பெறுபவர்களுக்குத் தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்து 22-ம் தேதியன்று கருத்தரங்கமும் ஆவணம் இதழ்வெளியீடும், புதிய 5 நூல்கள் வெளியீடும் நடைபெற உள்ளது. கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓய்வு பெற்ற அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஸ்ரீதர், தனவேல், ராஜேந்திரன், மேலும் பல்வேறு வரலாற்று தொல்லியல் அறிஞர்கள் மற்றும் கீழடி அகழாய்வு பற்றி அதன் அதிகாரி ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். தொல்பொருள் மற்றும் நூல் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இவற்றுக்கான ஏற்பாடுகளை கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழுமம் செய்துள்ளது. 

 

இதில் கலந்துகொண்ட மாணவர்கள் பேசுகையில்,
இந்தப் பழங்கால கல்வெட்டு பயிற்சியின் மூலமாக நாங்கள் பழங்கால தமிழ் எழுத்துகளைப் படிப்பதற்கு எளிதாகிவிடும். இதனால் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள கோயில்களில் உள்ள பழங்கால எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள வரலாறுகளை எளிதாக நாங்களே நேரடியாகப் படித்துக்கொள்ள வசதியாக இருக்கும், இந்த வகுப்புகளில் கலந்துகொண்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது அதுமட்டுமல்லாமல் கல்வெட்டுகள் நம்முடைய பாரம்பர்யத்தின் சொத்தாக நினைக்கிறோம் உணர்வு பொங்க பேசுகிறார்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!