ஆசிய தடகள போட்டியில் மன்பிரீத் கவுர் வென்ற தங்கப்பதக்கம் பறிபோவது ஏன்?

மன்பிரீத் கவுர்


இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். இந்தச் சோதனை ஆசிய தடகளப் போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை இழக்க வைத்துள்ளது. இவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மன்பிரீத் கவுர், புவனேஸ்வரத்தில் சமீபத்தில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். பட்டியாலாவில் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடந்த பெடரேஷன் தடகளப் போட்டியில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். இவரிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியினர் ஊக்க மருந்து பரிசோதனைக்காக சிறுநீர் மாதிரி சேகரித்தனர். இந்தச் சோதனையின் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் மன்பிரீத் கவுர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்பிரீத் கவுரின் ‘பி’ மாதிரி சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவரது பதக்கங்கள் பறிக்கப்படும். சீனாவில் நடந்த ஆசியன் கிராண்ட் பிரி தடகளப் போட்டியில் 18.86 மீட்டர் தூரம் குண்டு வீசி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் லண்டனில் நடக்க உள்ள உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த மன்பிரீத் கவுர், அந்தப் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியிருப்பது இந்திய தடகள வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!