மக்களுக்காகப் போராடினால் குண்டர்சட்டம் ஏவுவதா?- வளர்மதியை விடுவிக்க குரல்தரும் தி.மு.க.  

வளர்மதி குண்டர்சட்டம்

மக்களுக்காகப் போராட்டம் நடத்தியதால் குண்டர்சட்டம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சேலம் மாணவி வளர்மதி, கதிராமங்கலம் மக்கள், பேராசிரியர் ஜெயராமன் ஆகியோரை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி விடுதலைசெய்ய வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. 

சென்னையில் இன்று நடந்த அக்கட்சியின் மாவட்டச்செயலாளர் கூட்டத்தில் இது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அந்தத் தீர்மான விவரம்: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் போராட்டம் நூறு நாள்களைத் தாண்டிவிட்டது. கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் குழாய்கள் நெல்வயல்களில் எண்ணைக் கசிவை ஏற்படுத்தி ஒரு புறம் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு;  இன்னொருபுறம் அதை எதிர்க்கும் கிராம மக்கள் மீது பொய்க் காரணங்களைக் கூறி போலீஸ் தடியடி நடத்துவது, பொய் வழக்குகளைப் பதிவுசெய்வது, பேராசிரியர் ஜெயராமன் உட்பட்டோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்துக்கொண்டு ஜாமீனில் விடுவிக்க அரசு தொடர்ந்து மறுத்து வருவது போன்ற அராஜகச் செயல்களை அத்துமீறிச் செய்து, தமிழகக் காவல்துறை தகுதியான தலைமையின்றி தடுமாறுகிறது. 

மெரினாவில் மெழுகுவத்திப் போராட்டம் நடத்தியதற்காகவும், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காகவும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது, ’இயற்கையைக் காப்போம்’ என்று துண்டுப்பிரசுரம் விநியோகித்ததற்காக சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது என்று அடக்குமுறையை காவல்துறை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இது மட்டுமன்றி, பா.ஜ.க.வை விமர்சிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இந்த ’குதிரைபேர’ ஆட்சி, இவர்கள் மீதெல்லாம் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை எடுத்திருப்பது வன்மையாகக் கண்டனத்துக்குரியது. 

மாநில நலன் கருதி நடைபெறும் ஜனநாயகரீதியான மக்கள் போராட்டங்களை நசுக்கும்வகையில் குண்டர் சட்டத்தை ஏவுவதை உடனடியாக நிறுத்தி, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள கதிராமங்கலம் மக்கள் மற்றும் பேராசிரியர் ஜெயராமன், சேலம் மாணவி வளர்மதி, மே17 இயக்க அமைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரை உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. மக்கள் அச்சம் தெரிவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் வேண்டும் என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!