வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (20/07/2017)

கடைசி தொடர்பு:17:39 (09/07/2018)

பாக் நீரிணையில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க புதிய திட்டம்!

தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரால் சமீபகாலமாக அதிகரித்து வரும் மீன்பிடி நெருக்கடிகளை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்தவும், தூண்டில் மற்றும் செவுள் வலை மூலம் சூரை மீன் பிடிப்பதற்கு ஏதுவாக புதிய மீன்பிடி படகுகளை கட்டுவதற்கான புதிய திட்டத்தை பாக் நீரிணைப் பகுதியைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் படி தூண்டில் மூலம் சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் வகையிலான புதிய மீன்பிடி படகினை கட்டிட ரூ.80 லட்சம் செலவு பிடிக்கும். இதில் 70% மானியத்தை மத்திய மாநில அரசுகள் வழங்கும். இதன்படி மத்திய அரசு ரூ 40 லட்சமும், மாநில அரசு 16 லட்சமும், வங்கி அல்லது நிறுவன நிதி உதவியாக 16 லட்சமும், பயனாளியின் பங்குத் தொகையாக 8 லட்சமும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பாக் நீரிணைப் பகுதியைச் சார்ந்து முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். 

மேலும் பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் தற்சமயம் உள்ள படகுகள், மீட்க முடியாத நிலையில் உடைந்துபோன படகுகள், சிறைப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட படகுகள் கூட்டு உரிமையில் உள்ள மற்றும் தனிநபர் இழுவை படகினை மாற்ற சம்மதம் தெரிவிப்பவர்கள் இதன்மூலம் பயன் பெறலாம். மானியம் பெறும் மீனவர் தனது இழு வலை படகை உடைக்கவோ அல்லது பாக் நீரிணைப் பகுதியை தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கு விற்கவோ வேண்டும். 

இதற்கான விண்ணப்ப படிவங்கள் வேண்டுவோர் அந்தந்த மீன்துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.fisheries.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்தோ கட்டணம் இன்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் மீன்துறை கூடுதல் இயக்குநர், ஒருங்கிணைந்த மீன்வளத்துறை கட்டடங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம். என்ற முகவரிக்கு நேரிலோ விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படையினரின் நெருக்கடியில் இருந்து மீனவர்களை மீட்கும் வகையில் இந்தத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.