'வடிவேலு பாணியில் கேள்வி கேட்கிறார்கள்' - செல்லூர் ராஜூ

அம்மா இல்லாததால் எங்களை வடிவேல் பாணியில் கேள்வி கேட்கின்றனர் என மனம் திறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ!

அமைச்சர் செல்லூர் ராஜு ஜெயலலிதா இருக்கும்போது, அம்மாவின் ஆட்சி தொடர வேண்டி பால் குடம், அம்மா நலம் பெற வேல் குத்து, அம்மா நீண்ட ஆயுள் பெற முளைப்பாரி என்று ஜெயலலிதாவுக்காக புதுசு புதுசா  பொதுமக்களை வாட்டி நேத்திக்கடன் செய்து நல்ல பெயர் எடுப்பார். ஆனால், மதுரை மக்கள் டிராபிக்கில் மாட்டிக்கொண்டு அவரை திட்டி தீர்ப்பார்கள். தற்போது தெர்மாகோல் திட்டத்தில் அவர் புகழ் சீனா வரை பறந்துகிடக்கிறது. இதனால் மதுரையில் இவருக்கு செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. இதனைப் போக்க தற்போது நேரடியாக ஏரியாக்களுக்குச் சென்று விசிட் அடித்து மக்களிடம் குறைகளை கேட்டுவருகிறார்.

இன்று மதுரை ஜெய்ஹிந்த்புரம் 90 மற்றும் 91-வது வார்டு மக்களின் சிறப்புக் குறை தீர்ப்பு நடத்தினார். இதில் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை மனுவாக அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக்கொண்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

''கமல் சிறந்த நடிகர்தான் தேவையில்லாத பிரச்னையில் ஈடுபடுகிறார். பொத்தாம் பொதுவாக ஊழல் பற்றி கமல் கூறுவது தவறு. தனிப்பட்ட முறையில் தனக்கும் கமலுக்கும் எவ்வித வேறுபாடு இல்லை. பல பிரச்னையில் கமலுக்கு இந்த அரசு ஆதரவாக இருந்தது குறிப்பிட்டதக்கது. திரைப்படங்களில் நடிப்பு இல்லாமல் தொலைக்காட்சியில் நடித்து வருகிறார்.  ஸ்டாலினால் நடந்து முடிந்த சட்டசபையில் எவ்வித திட்டத்திலும் தவறு உள்ளதை நிரூபிக்க முடிந்ததா? பொது மேடைகளில் புலியாக, சட்டமன்றத்துக்கு உள்ளே ஸ்டாலின் எலியாக மாறுகிறார். தடை செய்யப்பட்ட குட்கா  பொருளை அண்டை மாநிலங்களிலிருந்து பெற்று சட்டமன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளார். ஜெயலலிதாவின் அரசைக் குறை சொல்வதற்காக செய்துவருகின்றனர். கிழவி குமரியாக மாறினாலும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்காது.

ஜெயலலிதா இல்லாத ஆளுமையால் எங்களை 'வடிவேலு' பாணியில் யார்வேண்டுமானாலும் கேள்வி கேட்கின்றனர். எங்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வந்தால் ஊடகங்களுக்கு பாதுகாப்பு இருக்காது'' என்றார் செல்லூர் ராஜூ. இன்று பார்வையிட்ட சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை என்று மக்கள் குறை கூறிய உடன் எந்திரன் ரஜினி மாதிரி உடனடியாக செயல்படுத்த உத்தரவு போட்டுத் தண்ணீர் வழங்கினார்! உங்கள் செயல்பாடு தொடருமா செல்லூர் ராஜூ சார் என்றபடி பொதுமக்கள் ஏக்கத்தோடு அவரைப் பார்த்தனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!