வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (20/07/2017)

கடைசி தொடர்பு:21:53 (20/07/2017)

தன் தோழியை கொன்று புதைத்த பெண்! விசாரணையின்போது போலீஸ் கண்ணெதிரே தற்கொலை!


தனது தோழியை கொன்று புதைத்த பெண், விசாரணைக்குப் பயந்து போலீஸ் கண்ணெதிரே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.


கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாடியை அடுத்த புலியூர்காட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் திவ்யா. இவர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த மே மாதம் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, பண்ருட்டி அருகேயுள்ள சாத்தம்மாம்பட்டில் உள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்று கொஞ்ச நாள்கள் தங்கியிருந்திருக்கிறார். அங்கிருந்து சென்னைக்கு கிளம்பிச் செல்வதாக சென்றவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக திவ்யாவின் அக்கா ஜெகதீஸ்வரி காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவந்த காடாம்புலியூர் போலீஸார், திவ்யாவின் செல்போன் நம்பரை வைத்து கடைசியாக யார் யாருடன் பேசியுள்ளார் என்ற விவரங்களைத் திரட்டினர். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவின் உயிர்த் தோழியான சித்ராவிடம் கடைசியாக பேசியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சித்ராவிடம் தீவிர விசாரணை நடத்தினர் போலீஸார். ஆனாலும், கொஞ்சம்கூட பிடிகொடுக்காமல் முன்னுக்குப்பின் முரணாகப் பேசி வந்துள்ளார் சித்ரா. இதனால் சித்ரா மீது சந்தேகமடைந்த போலீஸார் சித்ராவைத் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தன்னைத் தீவிரமாக கண்காணிப்பதை அறிந்த சித்ரா இனிமேல் போலீஸாரிடமிருந்து தப்ப முடியாது என தெரிந்து,  தான் திவ்யாவைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். விசாரணையில் திவ்யாவுக்கும் சித்ராவின் கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சித்ரா திவ்யாவை கொலை செய்ததாக கூறியுள்ளார். 


மேலும், திவ்யாவின் சடலத்தை பண்ருட்டி அருகே காமாட்சிப்பேட்டை கெடிலம் ஆற்றில் புதைத்துவிட்டதாகவும் செல்போனையும் அதே இடத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  இதையறிந்த போலீஸார் அவரை கொலை செய்த இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். திவ்யாவின் சடலத்தை புதைத்த இடத்தைக் காட்டிய சித்ரா, செல்போன்  வேறு இடத்தில் புதைத்திருப்பதாகக்கூறி கீழ்காங்கேயன்குப்பம் பகுதிக்கு போலீசாருடன் சென்றுள்ளார். அங்கிருந்த சுமார் 300 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் சித்ரா.


திவ்யாவை கொலை செய்ய சித்ராவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? சித்ரா உண்மையில் தற்கொலைதான் செய்துகொண்டாரா? இல்லை தவறி கிணற்றுக்குள் விழுந்தாரா? இக்கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியைக் காப்பாற்ற போலீஸாரே சித்ராவை தள்ளிவிட்டார்களா? என்பது விசாரணையில்தான் தெரியவரும்.