ரஜினி, கமல் வருகையால் என்ன நடக்கும்..? முரசொலி பவளவிழா ஏற்பாடுகள் ஜரூர்!

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 18-வது வயதில் 10.08.1942-ல் 'முரசொலி' செய்தித்தாளை கொண்டு வந்தார். அது இரண்டாம்  உலகப்போர் காலம் என்பதால் முரசொலியை,  கிடைத்த தாள்களில் அச்சிட்டு வெளியிட்டார் கருணாநிதி. அந்த முரசொலிக்கு இந்த வருடம் பவள விழா ஆண்டு. அதை விமரிசையாக கொண்டாட தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.  வரும், ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய  தேதிகளில் பவள விழா சென்னையில்  நடைபெறுகிறது. 10-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மூத்த எழுத்தாளர்கள், அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அழைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

ரஜினி


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை அழைத்துள்ளனர் ஸ்டாலின். அவர்கள், இருவரும் பங்கேற்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவே தெரிகிறது. 2-வது நாள் நிகழ்ச்சி ஆகஸ்ட்11-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடக்கிறது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்று அனைத்து கட்சித் தலைவர்களும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார். அதற்கான வேலைகளில் தி.மு.க முன்னணி தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். 

 கமல்

தமிழக அரசுக்கு எதிராக கமல்ஹாசன் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ரஜினியும் அரசியல் ஆசையில் திட்டம் வகுத்துக் கொண்டு இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் தி.மு.க விழாவுக்கு ஸ்டாலின் அழைத்து இருப்பது, தமிழக அரசுக்கு எதிராக அணி சேர்க்கும் முகமாகவே தெரிகிறது. மேலும், வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் விழாவுக்கு அழைக்கும் முடிவை தி.மு.க எடுத்து இருப்பதும் தமிழக அரசுக்கு எதிரான வலுவான அரசியல் நகர்வாகவே தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!