’பாரத நாட்டின் நிலையான நினைவாகத் திகழ்பவர் கலாம்’. மயில்சாமி அண்ணாதுரை நெகிழ்ச்சி!

இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் வீட்டுக்குச் சென்ற அவர், கலாமின் மூத்த சகோதரர் முத்து முகம்மது மரைக்காயரைச் சந்தித்து நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் ஏற்பாடுசெய்துள்ள நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைக்க வந்துள்ளேன். பாரத நாட்டின் நிலையான நினைவாகத் திகழ்பவர் டாக்டர் கலாம்.

 

 

வெளிநாடுகளில், இந்தியாவின் அடையாளமாகத் திகழும் இமயம் , கங்கை போன்றவற்றுக்கு இணையாகப் பேசப்பட்டவர் கலாம் எங்கள் முன்னோடியாகத் திகழ்ந்த அவர், இந்திய நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துச் சென்றிருக்கிறார். அவற்றை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓர் ஆண்டில் இஸ்ரோ அனுப்பிய 14 செயற்கை கோள்களில் கலாமின் எதிர்பார்ப்பான 10 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளோம், மங்கள்யான் விண்ணில் சிறப்பாக இயங்கிவருகிறது. அதைவிட மேம்பட்ட வகையில் மங்கள்யான்-2 ஐ உருவாக்குவது தொடர்பான ஆய்வுப்பணிகள் நடந்துவருகின்றன. சந்திராயன்-2  செயற்கைக்கோளை 2018-ல் விண்ணுக்கு அனுப்ப உள்ளோம். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக டி.ஆர்.டி.ஓ-வால் உருவாக்கப்பட்டுள்ள கலாம் நினைவிடத்தில், இஸ்ரோ சார்பில் கலாமின் நினைவைப் போற்றும் வகையில் பல பணிகளை மேற்கொள்ள உள்ளோம்" எனக் கூறினார்.


 

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையுடன் இஸ்ரோ துணை இயக்குநர் டாக்டர் சர்மா, கலாமின் பேரன் சலீம், தமிழ்த்தாய் அறக்கட்டளை நிர்வாகி கராத்தே பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!