வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (21/07/2017)

கடைசி தொடர்பு:20:47 (21/07/2017)

சசிகலா சிறை மாற்றம்.... என்ன நிலவரம்

சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டுக் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டார்கள். அன்றிலிருந்து இன்றுவரை கர்நாடக சிறையில் இருந்தே தமிழக அரசியல் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை இருந்துவருகிறது.

இந்தநிலையில், கடந்த 10-ம் தேதி சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா ஆய்வுக்குச் சென்றபோது, ''சிறைக்குள் சசிகலாவுக்குச் சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. நவீன சமையல் அறைகள் உள்ளன. இதற்காகச் சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவ் 2கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது'' எனக் கொளுத்திப்போடத் தமிழகம் மற்றும் கர்நாடகா முழுவதும் உச்சபட்ச பரபரப்புகள் ஏற்பட்டன.

லோக்கல் மீடியாமுதல் நேஷனல் மீடியாவரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை சம்பவங்களையே ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். டி.ஐ.ஜி ரூபாவும், டி.ஜி.பி சத்திய நாராயண ராவும் மாறிமாறிப் பேட்டியளித்தார்கள். அதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தார்.

விசாரணைக் குழு அமைத்த பிறகும் பிரச்னைகளுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் சிறைச்சாலைக்குச் சென்று அடையாளங்களை அழித்ததாலும், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும் முதல்வர் சித்தராமையா பிரச்னைகளுக்குள்ளான அனைவரையும் பணியிடை மாற்றம் செய்தார். சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை கமிஷனராகவும், சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவ்  கட்டாயவிடுப்பிலும், சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

பரப்பன அக்ரஹாரா

அதையடுத்து, சிறைக்குள் சசிகலா தங்கியிருந்த சொகுசு அறைகளும், அவர் ஹேண்ட் பேக் -உடன் உலா வரும் வீடியோவும் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்று அனைவராலும் கருதப்பட்டது.  

இதுகுறித்து கர்நாடாவில் உள்ள சிலரிடம் பேசினோம். ''கர்நாடக உளவுத்துறை அதிகாரிகள்  முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து... 'விரைவில், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வருவதால், சிறைத்துறை சம்பவங்கள் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தி உங்களுக்குக் கெட்டபெயர் வாங்கிக் கொடுத்துவிடும். அதனால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, கர்நாடகாவில் உள்ள மைசூரு அல்லது தும்கூர் மகளிர் சிறைச்சாலைக்கு மாற்றிவிடலாம்' என்று ஆலோசனை செய்தார்கள். ஆனால் சித்தராமையா, 'சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றினால்... அது, கர்நாடக அரசின் இமேஜைப் பாதிக்கும் செயலாக இருக்கும். அதனால், மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறைத்துறையைச் சேர்ந்தவர்கள் சிறைத்துறை விதிகளைப் பின்பற்றி நடந்துகொள்கிறார்களா என்பதை நுட்பமாகக் கவனிக்க வேண்டும்' என்று கடிந்து அனுப்பியிருக்கிறார். அதனால், சசிகலா வேறு சிறைக்குத் தற்போது மாற்றப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. மேலும், அவரை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றால், அதுகுறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றால், 'கர்நாடக அரசு எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை' என்று தெரிவிக்க வேண்டும். அப்படிக் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தால், அது அந்த மாநில அரசின் இமேஜைக் காற்றில் பறக்கவிடும் செயலாக இருக்கும். ஆதலால், அதை சித்தராமையா ஒப்புக்கொள்ள மாட்டார். அதனால், சசிகலா தற்போது வேறு சிறைக்கு மாற்றம் இல்லை என்றே உறுதியாகக் கூறப்படுகிறது'' என அவர்கள் தெரிவித்தனர்.

 


டிரெண்டிங் @ விகடன்