வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (21/07/2017)

கடைசி தொடர்பு:13:43 (21/07/2017)

நீதிபதி மாமனாரைத் தண்டியுங்கள்...! - உயர் நீதிமன்றத்தை அதிரவைத்த வழக்கு

நீதிபதி குடும்பத்தினர் மீது மருமகள் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காத விருதுநகர் மாவட்ட ஏடிஎஸ்பி-க்கு விளக்கம் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் விட உத்தரவிட்டுள்ளது நீதித்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

madurai HC

விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று தாக்கல் செய்த மனுவில், ''எனக்கும் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்பவருக்கும்  2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அவர்கள் கேட்ட நகை, சீர்வரிசை பொருள்கள் அனைத்தும் கொடுத்தோம். ஆனால், என் கணவரின் உடலில் இருந்த சில பாதிப்புகளைத் திருமணத்துக்கு முன் எங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல் போதைக்கு அடிமையான என் கணவர் அடிக்கடி என்னிடம் சண்டை போடுவார். கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி கடுமையாக என்னைத் தாக்கினார். அந்தக் காயத்துடன் என் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன் பின்னர், என்னைத் தாக்கிக் காயப்படுத்திய கணவர், அதற்குக் காரணமான அவரின் பெற்றோர்மீதும் நடவடிக்கை எடுக்கும்படி விருதுநகர் போலீஸில் புகார் அளித்தேன். விசாரித்த, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்காமல், புகாரை சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பிவிட்டார்.

என் கணவரின் பெற்றோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாமனாரும், பெண்கள் நீதிமன்ற நீதிபதியாக மாமியாரும் இருக்கிறார்கள். அதனால், அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வருகிறார்கள், அதனால், உயர் நீதிமன்றம் தலையிட்டு என் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிபதி, இந்த மனுவில் கூறப்பட்டுள்ள புகார் சம்பந்தமாக விருதுநகர் ஏடிஎஸ்பி- யிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார். இவ்வழக்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க