Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நியமன எம்எல்ஏ விவகாரம் - புதுச்சேரி பா.ஜ.க-வில் வெடித்த கோஷ்டி பூசல்

புதுச்சேரி நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் காங்கிரசுக்கும் பா.ஜ.க-வுக்கும் கடும் மோதல் நிலவி வருகிறது. தற்போது அதே விவகாரத்துக்காக வெடித்த நிலையில் பா.ஜ.க-வுக்குள்ளேயே கோஷ்டி மோதல் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி சட்டமன்றத்துக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மூன்று பேரை மத்திய அரசு நியமன எம்எல்ஏ-க்களாக நியமித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் கடுமையான மோதலை ஏற்படுத்தியிருக்கிறது. எம்எல்ஏ-க்களை நியமித்த மத்திய அரசைக் கண்டித்தும், அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த கிரண்பேடியைக் கண்டித்தும் தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க-வின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் கல்வி நிறுவனத்தின் தாளாளர் செல்வகணபதி ஆகிய மூன்று பேரை ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரையின்றி புதுச்சேரி சட்டமன்றத்துக்கு எம்எல்ஏ-க்களாக நியமித்தது மத்திய அரசு. இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில் அந்த மூவருக்கும் ரகசியமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் கிரண்பேடி. பா.ஜ.க-வைச் சார்ந்த மூன்று பேரை நியமன எம்எல்ஏ-க்களுக்காக பரிந்துரைத்தது கிரண்பேடிதான் என்று குற்றம் சுமத்தியது காங்கிரஸ். இதைக் கண்டித்து நடத்திய முழு அடைப்பால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் முடங்கியது. இதையடுத்து நியமன எம்எல்ஏ-க்களை நான் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்தார் கிரண்பேடி. இந்நிலையில், கிரண்பேடியின் பரிந்துரையின் பேரில்தான் எம்எல்ஏ-க்கள் நியமிக்கப்பட்டனர். மத்திய அமைச்சர் பாக்கன் சிங் குலாஸ்தேவும், மத்திய அரசுதான் நியமித்தது என்று பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்திருந்தனர். இந்த இருவேறு கருத்துகளால் நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் புதுச்சேரி மக்களிடையே குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னால் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளர்களில் ஒருவருமான தாமோதரன் மற்றும் பா.ஜ.க-வின் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் இருவரும் பா.ஜ.க. அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், 'பா.ஜ.க. மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் நியமன எம்எல்ஏ குறித்த விவாதத்தில் கட்சி அலுவலகத்தில் உள்ள ரவுடிகளை வைத்து மிரட்டிய மாநிலத் தலைவர் சாமிநாதனைக் கண்டித்து அறவழி உண்ணாவிரதப் போராட்டம்' என்று எழுதப்பட்ட தட்டியை கையில் வைத்திருக்கின்றனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மாநிலத் தலைவரும் நியமன எம்எல்ஏ-வுமான சாமிநாதன் கட்சி அலுவலகத்தின் கதவுகளை அடைத்துவிட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் லேசாக சலசலப்பு நிலவியது.

இதற்கிடையில், “நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் சீனியர்களுக்குப் பதவிகளைத் தராமல் ரவுடிகளை வைத்து சாமிநாதன் மிரட்டினார். அதற்கு அறவழியில் உண்ணாவிரதம் இருப்பதற்கும் கட்சி அலுவலகத்தைப் பூட்டி வைத்து மிரட்டுகிறார்” என்றனர் தாமோதரன் மற்றும் இளங்கோவின் ஆதரவாளர்கள். அப்போது வெளியில் வந்த சாமிநாதன், “இது கட்சிக்குள் இருக்கும் சாதாரணப் பிரச்னை. அதை நாங்கள் பேசி சரி செய்து கொள்வோம். அவர்களை மிரட்டவில்லை” என்றார். அப்புறம் ஏன் அலுவலகத்தைப் பூட்டினீர்கள்? என்று நிருபர்கள் கேட்டபிறகு அலுவலகம் திறக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close