அந்த மூன்றரை மணிநேரம்... உளவுத்துறையைக் கதறவிட்ட ஓ.பி.எஸ்! | MLAs call for OPS

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (21/07/2017)

கடைசி தொடர்பு:15:10 (21/07/2017)

அந்த மூன்றரை மணிநேரம்... உளவுத்துறையைக் கதறவிட்ட ஓ.பி.எஸ்!

ஓ பி எஸ்

னது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு கடந்த 19 ந்தேதி வந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று மாலை சுமார் மூன்றரை மணிநேரம் நெருங்கிய வட்டாரத்திற்குக் கூட தெரியாதபடி எங்கோ சென்று திரும்பினார். இதனால் 24 மணிநேரமும் அவரைக் கண்காணித்து வந்த உளவுத்துறை ஓ.பி.எஸ்ஸின் இந்த மாயம் குறித்து ரிப்போர்ட் செய்ய முடியாமல் குழம்பிவருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்திற்கு கடந்த 19ம் தேதி வந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். மாவட்டத்தின் கட்சி தொடர்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் நேற்று மாலை சரியாக 4 மணியளவில், தனது இல்லத்தில் இருந்து, தனது நண்பர் ஒருவரது காரில் ஏறி எங்கேயோ புறப்பட்டுச் சென்றார். இது அவரது நெருங்கிய வட்டாரத்திற்கு கூட சொல்லப்படவில்லை. இதனால் ஓ.பி.எஸ் எங்கு சென்றார் என்பது தெரியாமல் குழம்பி நின்றனர். வழக்கமாக எங்கு சென்றாலும், தனது ஆதரவாளர்கள் புடைசூழ செல்லும் ஓ.பி.எஸ், திடீரென ஒரே ஒருவருடன் சென்றது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. இதனிடையே சரியாக 7.30 மணிக்கு தனது இல்லத்திற்கு திரும்பினார் ஓ.பி.எஸ். அப்போது எதையோ சாதித்த மன திருப்தியால் அவர் முகம் மலர்ச்சியாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.

ஓ.பி.எஸ்ஸின் இந்த மூன்றரை மணிநேர மர்மம் கட்சிக்காரர்களைவிட உளவுத்துறையை ரொம்பவே குழப்பிவிட்டது. அவர்களுக்கும் சுமார் மூன்றரை மணி நேரம் ஓ.பி.எஸ் எங்கு சென்றார், யாரைச் சந்தித்தார் என்ற எந்தத் தகவல்களும் இல்லை.

உளவுத்துறை கண்ணில் மண்ணைத் தூவிய ஓ.பி.எஸ்.!

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் இருந்து, தனது எம்எல்ஏக்-கள் மற்றும் அமைச்சர்களை முழுநேரமும் உளவுத்துறையின் வளையத்திற்குள் வைத்திருப்பார். அவர்களின் ஒவ்வோர் அசைவையும், உளவுத்துறை அறிக்கைகளாக ஜெயலலிதாவிடம் கொடுப்பது வழக்கம். அதன் அடிப்படையிலேயே எம்எல்ஏ-க்களின் மீது நடவடிக்கை எடுப்பார். அவர் மறைந்த பிறகு, அந்த அறிக்கை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும், சசிகலாவால் நியமிக்கப்பட்ட ஒருவருக்குச் சென்று கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சசிகலாவிற்கு எதிராகத் தனக்கென ஒரு கூட்டத்தை ஓ.பி.எஸ்  திரட்டிய பிறகு, ஓ.பி.எஸ், உளவுத்துறையின் கடுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். 

தனது சொந்த மாவட்டமான தேனிக்கு வரும்போதெல்லாம், அவர்மீதான கண்காணிப்பு வழக்கத்தை விட அதிகமாகும். ஆனால், நேற்று மாலை ஓ.பி.எஸ் திடீரென காரில் ஏறி புறப்பட்டது முதல், மீண்டும் வீட்டிற்கு வந்தது வரை எங்கே போனார், யாரைச் சந்தித்தார் போன்ற தகவல்களை உளவுத்துறையினரால்கூட திரட்ட முடியவில்லை. இப்போது வரை அதைக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறிவருவதாகச் சொல்லப்படுகிறது. 

அதிருப்தி எம்எல்ஏக்-களை சந்தித்தாரா ஓ.பி.எஸ்?

ஜக்கையன்தேனி மாவட்டத்தைப் பொருத்தவரை அதிமுக -வில் ஓ.பி.எஸ் அணி, தினகரனோடு நெருக்கம் காட்டும் ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் அணி என இரு அணிகள் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, தங்கத்தமிழ்ச்செல்வனே கட்சியிலும், எம்எல்ஏக-க்கள் ஆதரவிலும் பலமாக இருக்கிறார். ஓ.பி.எஸ் பக்கம் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மட்டுமே இருக்கிறார். தங்கத்தமிழ்ச்செல்வன் தினகரனுடன் காட்டும் நெருக்கம், எடப்பாடி அணியில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றபோதும், தேனி மாவட்டத்தில் கட்சிக்குப் பலமான ஒருவர் தேவை என்பதாலேயே கட்சி மேலிடம்  அமைதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், தினகரனுடன் நெருக்கம் காட்டுவதால், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தனது அணியில் உள்ள எம்எல்ஏ -க்களை சரிவர கவனிப்பதில்லையாம். அதாவது ஓ.பி.எஸ் தலைமையில் இருந்த போது கிடைத்த கவனிப்புகள், தற்போது கிடைக்கவில்லை எனக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் சொல்கிறார்கள். இந்நிலையில், நேற்று சுமார் மூன்றரை மணி நேரம் மாயமாக மறைந்த ஓ.பி.எஸ், அதிருப்தியில் இருக்கும் அந்த சில எம்எல்ஏ-க்களைச் சந்தித்துப் பேசியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்தச் சந்திப்பில், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் மற்றும் பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமு போன்றவர்கள் முக்கியமாகக் கலந்துகொண்டிருக்கலாம் என விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஓ.பி.எஸ் உடனான சந்திப்பு உண்மை தானா என்று அறிந்துகொள்ள, கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையனை தொடர்புகொண்டு பேச முயன்றோம். அவர் போனை எடுக்கவில்லை.!

கடந்த சில மாதங்களாகச் சொந்த மாவட்டத்திற்கு வரும் ஓ.பி.எஸ், கட்சிக் கூட்டங்கள், கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு என இல்லாமல், திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்குகள், புத்தக வெளியீட்டு விழா போன்றவற்றில் மட்டுமே கலந்துகொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று நடந்த ரகசியச் சந்திப்பு, மீண்டும் அரசியல் ஆட்டத்தை பரபரப்பாக்குவதற்கு ஏதோ ஒரு திட்டத்துடன் ஓ.பி.எஸ்  இருப்பதைக் காட்டுவதாகவும், நிச்சயம் தேனியில் மீண்டும் ஓ.பி.எஸ் கை ஓங்கும் என்று தேனி மாவட்ட அதிமுக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close