வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (21/07/2017)

கடைசி தொடர்பு:21:39 (21/07/2017)

நெடுவாசல் போராட்டமும்... 100 நாள்களும்! இதுவரை என்ன நடந்தது ? 

நெடுவாசல் போராட்டம்

மிழக மக்களின் வாழ்வாதாரமாகவும், உயிர்மூச்சாகவும் இருக்கக்கூடிய விவசாயத்தை வேரறுக்கத் துடிக்கும் ஹைட்ரோ கார்பன் அரக்கனை அழிப்பதற்காகப் போராடும் நெடுவாசல் மக்களின் போராட்டம் 100 நாள்களை எட்டியுள்ள நிலையில், இதுவரை மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளாததுதான் அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது.  

மத்திய அரசின் அறிவிப்பு!

பிப்ரவரி 15-ம் தேதி, ''இந்தியாவில், 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் எடுக்கப்படும்'' என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதனையடுத்து, அதன் மறுநாளே நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மாணவர்கள், இளைஞர்கள், சுற்றுவட்டார மக்கள் என அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் சார்பில் கையெழுத்து இயக்கமும், அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கணேஷிடமும் கோரிக்கை மனு வைக்கப்பட்டது.

பிப்ரவரி 19-ம் தேதி முதல் நெடுவாசல், கோட்டைக்காடு, நல்லாண்டார்கொள்ளை, வட காடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு நூதனப் போராட்டங்களை மக்கள் நடத்தினர். இதில், அரசியல் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் என அனைத்துத் தரப்பினரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். 

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் எனச் சமூக வலைதளங்களும் நெடுவாசல் மக்களின் போராட்டத்தை உலகமெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேறாது!

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி தேசிய தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களே, ''தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'' என்று அறிவிப்பு வெளியிட்டனர். மாநில முதல்வரும், ''ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது'' என அறிக்கை வெளியிட்டார்.

நெடுவாசல் மக்களுடன் பேச்சுவார்த்தை!

கோட்டைக்காடு கிராம மக்களிடம் கலெக்டர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டர் கணேஷ், ''ஒன்பது மாதங்களுக்குள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றாமல் விவசாய நிலமாக மாற்றித் தருவேன்'' என உறுதியளித்தார். அதன் பின்னர் கோட்டைக்காடு பகுதி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனாலும் நெடுவாசல், நல்லாண்டார்கொள்ளை, வட காடு போன்ற பகுதிகளில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்திவந்தனர். 

மார்ச் 10-ம் தேதி நெடுவாசல் மக்களிடம் கருத்துக் கேட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''நிபந்தனையற்ற நிலையில் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்'' என்று அறிவிப்பு வெளியிட்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்துக்கு வராது'' எனப் பேசினார்.  

மார்ச் 10-ம் தேதி மாலை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக நெடுவாசல் போராட்டக்களத்தில் வந்து கலந்துகொண்டு மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ''ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்கும்'' என உறுதியளித்தார். 

போராட்டம் கைவிடப்பட்டது!

அதன்பின்னர், ''10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறுவதால், மத்திய - மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாகப் போராட்டம் நிறுத்தப்படுகிறது'' என நெடுவாசல் மக்கள் அறிவித்தனர்.

நெடுவாசல் போராட்டம்

மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை!

மார்ச் 22-ம் தேதி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனனிடம், டெல்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சரைச் சந்திப்பது குறித்து ஆலோசனை நடத்தினர் நெடுவாசல் மக்கள்.

பின்னர், டெல்லிக்குச் சென்ற நெடுவாசல் போராட்டக் குழுவினர், தர்மேந்திர பிதான் மற்றும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ''மாநில அரசிடம் கருத்துக் கேட்டபிறகு, அந்த அரசு வேண்டாம் என்றால் நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்'' எனப் பதிலளித்தார் தர்மேந்திர பிதான் . தொடர்ந்து போராட்டக் குழுவினர், ''எண்ணெய் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதையும், அதனால் ஏற்படும் சிரமங்களையும், மக்களைத் தாக்கும் கொடிய நோய்கள் பற்றியும் அவர்களிடம் விளக்கமளித்தனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்!

மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட 10 நாள்களில், அதாவது, மார்ச் 27-ம்தேதி மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டது.

இதனால் கொதிப்படைந்த போராட்டக் குழுவினர், ஏப்ரல் 2-ம் தேதி நெடுவாசலைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபா கூட்டம் நடத்தி, அதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். 

மத்திய அரசின் அறிவிப்பு குறித்து, மாநில அரசிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தும் வாய்ப்புக் கிடைக்காததால், கொதிப்படைந்த நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தை அறிவித்தனர்.

மீண்டும் போராட்டம்! 

ஏப்ரல் 12-ம் தேதிமுதல் மீண்டும் நெடுவாசல் மக்கள் தொடர்ந்து பல்வேறுகட்ட நூதனப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாதபோதும் நெடுவாசல் மக்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை.

ஜூலை 15-ம் தேதி, அதாவது போராட்டத்தின் 92-வது நாளன்று கலெக்டர் கணேஷ், நெடுவாசல் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ''புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துக்கு 12 லட்சம் ரூபாயை ஓ.என்.ஜி.சி நிறுவனம் வழங்கியுள்ளது.  அதை, உடனே திருப்பி அனுப்பவேண்டும். அப்போதுதான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம்'' எனப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். அதற்கு கலெக்டர் கணேஷ், ''ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டுவிடும்'' எனத் தெரிவித்தார். 

இந்தநிலையில்தான், ''தமிழக அரசின் ஒப்புதலோடு, மத்திய அரசின் பாதுகாப்போடு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவோம்'' என்று டெல்லியில், ஜெம் நிறுவன இயக்குநர் தெரிவித்தார். 

அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஆர்ப்பாட்டம்!

இதையடுத்து, போராட்டத்தின் 95-வது நாளன்று புதுக்கோட்டை தடிகொண்டான் ஐயனார் திடலில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெடுவாசல் மக்கள் பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்துக் கட்சியினரும் இதில் கலந்துகொண்டு, ''ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதை வாபஸ் பெற வேண்டும் எனவும், இதற்குச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' எனவும் வலியுறுத்தினர்.

முதல்வர், அமைச்சர் கிண்டல்!

இந்த நிலையில், நெடுவாசல் குறித்து சட்டமன்றத்தில் ஸ்டாலின் கோரிக்கை எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த முதலவர், ''பெண்களும் குழந்தைகளையும் வைத்துப் போராடுவது ஃபேஷனாகிப் போய்விட்டது'' என்றார். 

அமைச்சர் செல்லூர் ராஜோ, ''நெடுவசால் மக்கள் விளம்பரத்துக்காகப் போராடி வருகிறார்கள். மீடியா யாரும் போகவில்லையென்றால், போராட்டத்தைக் கைவிட்டுவிடுவார்கள் எனத்  தெரிவித்தார். இதற்கு நெடுவாசல் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இப்படியாகக் கடந்துகொண்டிருக்கும் நெடுவாசலின் போராட்டம் தற்போது 100 நாள்களை எட்டியுள்ளது. இதுகுறித்து நெடுவாசல் மக்கள், ''சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதைக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகுதான் எங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம்'' எனச் சவால் விடுகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்