Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும்' அ.தி.மு.க. ஆட்சி முடியும் தருணமா இது?

`ஓய்வறியாமல், லஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல், நேர்மையாகச் செயல்பட்டு கூவத்தூரில் கூடாரம் அமைத்துக்கொண்ட உண்மையான மக்கள் தொண்டர்களுக்குக் கிடைத்த பரிசுதான் `சம்பள உயர்வு'' என்று எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வு குறித்து நக்கலடிக்கின்றனர் நெட்டிசன்கள். 

அதிமுக, எடப்பாடி, admk, ஆட்சி

தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கான ஊதியம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதுவரை எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாய். இந்தச் சம்பளம் 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக எடப்பாடி தெரிவித்துள்ளார். `எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். எம்.எல்.ஏ-க்களுக்கான ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது' என எம்.எல்.ஏ-க்களுக்கு அடுக்கடுக்காக இன்ப அதிர்ச்சி அளித்தார் எடப்பாடி. 

தற்போதைய தமிழக எம்.எல்.ஏ-க்களில் எவரும் கக்கன், காமராஜரைப்போல் ஏழ்மை நிலையில் இல்லை. எம்.எல்.ஏ-க்களின் பதவி என்பது `மக்கள் சேவை' என்ற நிலைமாறி, இது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இந்தத் தொழிலுக்கு, `சம்பளம்' என்பதை எதிர்பார்த்து யாரும் வரவில்லை; இனி வரவும் மாட்டார்கள். இந்தத் தொழிலில் வருவாய் ஈட்டும் முக்கிய வழி சம்பளம் அல்ல. சம்பளம் இவர்களுக்கு ஒரு பாக்கெட் மணிதான். இவர்களில் விதிவிலக்கான எம்.எல்.ஏ-க்களும் இருக்கலாம். ஆனால், `என்ன வேலை பார்த்ததற்கு இவர்களுக்கு சம்பள உயர்வு? கூவத்தூரில் சம்பாதிக்காததையா இப்போது சம்பாதிக்கப்போகின்றனர்? இந்தச் சம்பளத்தை வைத்துத்தான் இவர்கள் பிழைப்பு நடத்துவதைப்போல சம்பள உயர்வு அளித்துள்ளார் எடப்பாடி' என்று சமூக வலைதளங்களில், எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வு குறித்து அனல் கக்குகின்றனர் மக்கள். `தமிழ்நாடு நிதி நிலைமை சரியில்லை' எனச் சொல்லும் எடப்பாடி, எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தை மட்டும் இரண்டு மடங்காக உயர்த்தியது ஏன்? 

ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசின் கடன் அதிகரித்துக்கொண்டேபோகிறது. கடந்த 2006-ம் ஆண்டில் 57,457 கோடி ரூபாய் ஆக இருந்தது தமிழக அரசின் கடன். 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த கடன் 3,14,366 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் இதற்கான வட்டியும் கூடுகிறது. கடன் வாங்கியதற்கான வட்டி, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அல்ல... ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய்க்குமேல் செலுத்தவேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசின் கஜானாவில் எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வுக்கு இப்போது பணம் இருக்கிறதா? 

தமிழகத்தின் பல துறைகளில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வோ, சம்பள உயர்வோ கிடைப்பதில்லை. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்த பிறகே பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இப்படி எத்தனையோ அரசு ஊழியர்கள் பதவி உயர்வின்றியும் ஊதிய உயர்வுவின்றியும் பணியாற்றி வரும்போது, எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பளத்தை இரு மடங்காக உயர்த்துவது தகுமா? அரசு ஊழியர்கள் பணி உயர்வு, சம்பள உயர்வு கோரும்போது பாய்ந்து வந்து முட்டுக்கட்டை போடும் அரசு, இதிலும் முட்டுக்கட்டை போட்டிருக்கலாமே?

நம்மில் பலருக்கு என்னதான் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் 2,000 ரூபாய் `இன்க்ரீமென்ட்' வாங்குவதற்கே நொந்து நூடுல்ஸ் ஆகவேண்டியுள்ளது. ஆனால், தமிழக எம்.எல்.ஏ-க்கள் என்ன சாதனை செய்தார்கள் எனத் தெரியவில்லை. இவர்களுக்கு 50,000 ரூபாய் இன்க்ரீமென்ட்! என்ன கொடுமை சார் இது?

தமிழகத்தில் மின்சார வாரியம் நஷ்டத்தில் இருக்கிறது; போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இருக்கிறது; தமிழக அரசின் நிதியே பற்றாக்குறையாக இருக்கிறது; தமிழகத்தில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய பணம் இல்லை; மனமில்லை. ஆனால், எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பளம் இரட்டிப்பாக்க மட்டும் பணம் இருக்கிறதே, எப்படி? பாலும் தேனும் காவிரி ஆற்றில் பெருகி ஓடவைத்த சாதனைக்கான பரிசா இது?

ஒரு நிறுவனத்திலிருந்து திடீரென அதிக ஊழியர்கள் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக சம்பள உயர்வு என்பது வழங்கப்படும். எம்.எல்.ஏ-க்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு என்பது, எடப்பாடி பழனிசாமி தன் அரசைக் காப்பாற்றிக்கொள்ள அரசுப் பணத்தில் கொடுக்கப்படும் லஞ்சப் பணமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. `காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும்' அ.தி.மு.க-வின் ஆட்சியின் ஆயுள் முடியும் தருணமா இது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement