ஆட்சியர் அலுவலகமா... அ.தி.மு.க. அலுவலகமா...? - போராடி வெற்றி கண்ட டிராஃபிக் ராமசாமி | Traffic ramasamy protest against tirupur district administration

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (22/07/2017)

கடைசி தொடர்பு:09:29 (22/07/2017)

ஆட்சியர் அலுவலகமா... அ.தி.மு.க. அலுவலகமா...? - போராடி வெற்றி கண்ட டிராஃபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமி

திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனர்களை அகற்றுவதற்காகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி.

திருப்பூரில் இன்று (22-ம் தேதி) எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. தமிழக முதல்வர், தமிழக தலைமைச் செயலாளர், மாநில அமைச்சர்கள், எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ளும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கும் விதமாகத் திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க-வினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள நடைபாதையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும்  அ.தி.மு.க-வினர் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று ஃப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த டிராஃபிக் ராமசாமி, இந்த ஃப்ளக்ஸ் பேனர்களை எல்லாம் பார்த்துவிட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் பேனர்களை உடனே அகற்றுமாறு கோரிக்கைவைத்தார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதைப் பெரிதுபடுத்தவில்லை. மாவட்டம் முழுவதும் எடப்பாடியாரை வரவேற்றுப் பேனர்கள் மின்னின என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் நடைபாதையில் தமிழக முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்களைக் கண்டவர், உடனடியாக அதை அகற்ற வலியுறுத்தித் தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

டிராபிக் ராமசாமி

பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட அவரது அறைக்குச் சென்றவர்... அங்கு ஆட்சியர் இல்லாததால், வேறு சில அலுவலர்களைச் சந்தித்து, ''ஆட்சியர் எங்கே'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள், ''ஆட்சியர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பணிகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார்'' என்று பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு வந்தவர், ''இங்கு அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளக்ஸ் பேனர்கள் அனைத்தையும் அகற்றும்வரை தர்ணா போராட்டம் தொடரும்'' என்று அறிவித்துவிட்டு அங்கேயே அமர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் துறையினர் டிராஃபிக் ராமசாமியிடம் சென்று தொடர் பேச்சுவார்த்தையை நடத்தினர். ஆனால், டிராஃபிக் ராமசாமி சற்றும் சமரசம் செய்துகொள்ளாததால், வேறு வழியின்றி அங்கு வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அனைத்தையும் அகற்றத் தொடங்கியது காவல் துறை.

டிராபிக் ராமசாமி

ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்படும் தகவலைக் கேள்விப்பட்டு அங்கு திரண்ட அ.தி.மு.க-வினர், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரத்துக்கு பெரும் பரபரப்பு நீடித்தது. ஆனால், ''ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டால் மட்டுமே இந்த இடத்தை விட்டுச் செல்வேன்'' என்று  டிராஃபிக் ராமசாமி உறுதியாக நின்றதால், அ.தி.மு.க-வினரை அப்புறப்படுத்திவிட்டு எடப்பாடியின் பேனர்கள் அனைத்தையும் கழற்றிக் குப்பையில் வீசினார்கள் காவல் துறையினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொதுமக்கள், டிராஃபிக் ராமசாமியை வாழ்த்தி வழியனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், டிராஃபிக் ராமசாமி ராமசாமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


டிரெண்டிங் @ விகடன்