வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (21/07/2017)

கடைசி தொடர்பு:07:33 (22/07/2017)

'இது ஊழல் ஆட்சி இல்லை எனில், வேறு எது?' - கமலை ஆதரிக்கும் சாரு நிவேதிதா

``உதய் பிரகாஷ், உலகப் புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர்;  என் நண்பர்.  அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது கமல்ஹாசன் பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னார்.  `கமல், இந்திய சினிமா துறையில் குறிப்பிடத்தக்க புத்திஜீவி' என அவர் குறிப்பிட்டார். பொதுவாக, தென்னிந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத வட இந்தியர்களுக்கு மத்தியில் கமல்ஹாசன்  நடிகராக மட்டும் அல்லாமல், ஒரு புத்திஜீவியாகவும் அறியப்பட்டிருந்தது கண்டு நான் ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்தேன்.  ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சில லோக்கல் மந்திரிகளுக்கு `கமல்ஹாசன்' என்றால் யார் எனத் தெரியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.  கமல் வைத்த விமர்சனங்களுக்காக அவரை மந்திரிகளே ஒருமையில் திட்டுவதையும், அதிகாரத்தைக் காட்டி மிரட்டுவதையும் பார்க்கும்போது, இங்கே நடந்துகொண்டிருப்பது மக்களாட்சியா அல்லது மன்னராட்சியா எனத் தெரியவில்லை.  மந்திரி என்றால் `சேவகர்' எனப் பொருள். யாருக்கு?  மன்னருக்கு.  மக்களாட்சியில் மன்னர் யார்?  மக்கள்.  கமல்ஹாசன் அந்த மக்களில் ஒருவர். அப்படியானால், கமல் சொன்ன விமர்சனத்தைக் கேட்டு மந்திரிகள் நடுங்கியிருக்க வேண்டும்.  ஏனென்றால், கமலின் குரல் மக்களின் குரல்.  

சாரு

கமல் அப்படி என்ன சொன்னார்?  தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. அப்படிச் சொன்னதில் தவறு என்ன?  இப்போது நடைபெறும் ஆட்சி, உண்மையில் மக்களின் விருப்பத்தில் நடைபெறும் ஆட்சியாகக்கொள்ள முடியாது. மக்கள் தேர்ந்தெடுத்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வை.  ஜெ. மர்மமான முறையில் இறந்தார்.  62 நாள்கள் மருத்துவமனையில் இருந்தும் அவருக்கு என்ன நோய், ஏன் இறந்தார் என்பது குறிப்பிட்ட நபர்களைத் தவிர யாருக்குமே தெரியாது. இன்றைய காலகட்டத்தில் வெற்றிலைப்பாக்குக் கடையில்கூட கண்காணிப்பு கேமரா இருக்கிறது. ஆனால், 62 நாள்கள் மிக மர்மமான முறையில் மக்களின் பார்வையிலிருந்து ஜெ. விலக்கப்பட்டிருந்தார். மாநிலத்தின் கவர்னர்கூட அவரைச் சந்திக்க முடியவில்லை. மாநில முதலமைச்சரும் சந்திக்க முடியவில்லை.  காரணம், சசிகலா என்ற ஒரே ஆள். அவர் யார்? ஜெ. இறந்ததும் அடுத்த நொடியே அ.தி.மு.க-வின் தலைவியாக முடிசூட்டிக்கொண்டார்.  முதலமைச்சர் நாற்காலியிலும் அமர முயன்றார். இன்னும் இந்த ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறதே?  சசிகலாவைச் சிறைக்கு அனுப்பிவிட்டது உச்ச நீதிமன்றம்.  எதற்காக? தேசச் சேவையில் ஈடுபட்டதற்காகவா?  கணக்கு இல்லாமல் சொத்து சேர்த்தார் என்பதற்காக. இது ஊழல் இல்லையா?  இதைத்தானே கமல் சொன்னார்.  

சசிகலா உள்ளே போனதும், அவர் உறவினரான தினகரன் கட்சியைக் கைப்பற்றினார். ஆட்சிப் பீடத்திலும் அமரப்பார்த்தார்.  ஆப்பிரிக்க நாடுகளில் இந்த முறை இன்னமும் இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் இருந்தால் நேராகப் போய் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துகொண்டு `நான்தான் இனிமேல் இந்த நாட்டின் ராஜா' என அறிவித்துவிடலாம். ஆனால், நம் நாட்டில் அரசியல் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை. ஆட்சியில் அமர வேண்டுமானால், தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று சில useless fellows சட்டம் வைத்திருக்கிறார்கள். `அதனால் என்ன?  காசை விட்டெறி; மக்கள் கதறிக்கொண்டு ஓட்டு போடுவார்கள்' என்றார் தினகரன். கட்சியிலேயே பலரும் `தேர்தலில் உங்களுக்கு டெபாசிட்கூட கிடைக்காது' என்றார்கள்.  கேட்கவில்லை. பணம் இஷ்டத்துக்கு விளையாடியது. பணம் வாங்கிய விளிம்புநிலைப் பெண்கள் சிலர் சொன்னார்கள், ` பணம் கொடுத்த அரசியல் ரெளடிகள் அந்த மக்களிடம், `பணம் வாங்கியிருக்கிறீர்கள்.  ஓட்டை மாற்றிப் போட்டால் மெஷினில் தெரிந்துவிடும்.  தொலைத்துவிடுவோம்... தொலைத்து' என மிரட்டியிருக்கிறார்கள்.'  தேர்தல் கமிஷன், தேர்தலையே ரத்து செய்துவிட்டது.  ஊழல் அதோடு நின்றதா? தேர்தல் கமிஷனுக்கே பணப்பெட்டியோடு போய்விட்டார்கள்.  கூரியர் பாய் டெல்லியில் மாட்டிக்கொண்டு, அனுப்பிய ஆளை மாட்டிவிட்டுவிட்டார். தினகரனுக்கு சிறை. இப்போது பெயிலில்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவர்கள் தங்கள் கட்சியின் தலைவிக்காவது விசுவாசமாக இருந்தார்களா? அவர் இறந்த கையோடு முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு சண்டையிட்டு, இப்போது கட்சியின் புகழ்பெற்ற இரட்டை இலை சின்னமே முடக்கப்பட்டுவிட்டது. இப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியின் முழுப்பெயர் என்ன? அ.இ.அ.தி.மு.க.அ. கட்சியா... அ.இ.அ.தி.மு.க.பு.த. கட்சியா? இந்த எழுத்துகளுக்கெல்லாம் விளக்கம் தேடினால், வசை சொல் தான் னினைவில் வரும்.  அதைத்தானே கமல் சொன்னார்?

லோக்கல் மந்திரிகளை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. `பா.ஜ.க-வின் game plan என்ன?' எனத் தெரியாமலேயே மாட்டிக்கொண்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல்களைப்போல் அவர்கள் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. சம்பந்தமே இல்லாமல் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா ஏன் கமலை விமர்சிக்க வேண்டும்? லோக்கல் மந்திரிகளைப் பயன்படுத்தி கமலை அரசியலுக்குள் வரவழைக்க விரும்புகிறது பா.ஜ.க. கமலும் ரஜினியும் அரசியலுக்கு வந்தால் அ.தி.மு.க-வை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு அந்த இடத்தில் பா.ஜ.க வந்துவிடலாம் என நினைக்கிறது. இதைப் புரிந்துகொள்ள முடியாத அ.தி.மு.க மந்திரிகளுக்காக நாம் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

கமலிடம் `அரசியலுக்கு வரத் தயாரா?' எனச் சவால்விடும் அரசியல்வாதிகளுக்கு, ஒரு விஷயம் புரியவில்லை. அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் அரசியலில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்! அப்படியானால் அரசியலைத் தொடர்ந்து  விமர்சித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் எல்லோரும் கட்சி ஆரம்பிக்க வேண்டுமா என்ன? ஓட்டு போட்ட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசை விமர்சிக்கவும் உரிமை உண்டு. இதை மந்திரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

கமலுக்கு முதுகெலும்பு இல்லை எனச் சொல்லும் ஹெச்.ராஜாவுக்கு ஒரு சேதி. கமல் மோடியின் `தூய்மை இந்தியா'வின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தவர். இதுவரை மோடி பற்றி ஒரு வார்த்தை பேசாதவர். அவரை நீங்கள் வம்புக்கு இழுக்கிறீர்கள் என்றால், அது நான் மேலே குறிப்பிட்ட திட்டமாகத்தான் இருக்கும். உண்மையில், `முதுகெலும்பு இல்லாதவர்' என ரஜினியைத்தான் சொல்லவேண்டும். ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மந்திரிகள் ஆளாளுக்கு கமலை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினியோ, வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. இனிமேல் அவர் அரசியலுக்கு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? இதற்கு மேலும் அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவர் வர மாட்டார். தன் பட வியாபாரத்துக்காகத்தான் `வருவேன்... வருவேன்...' எனப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார். நான் சொல்வது தவறு என்றால், அவர் கமலுக்கு ஆதரவாகப் பேசியாக வேண்டும்.''


டிரெண்டிங் @ விகடன்