Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிட்னி பிரச்னையால் ஊரை காலி பண்ணப்போறோம்! பயத்தில் கிராம மக்கள்

கிட்னி பிரச்சனையால் ஊரை காலிபன்ன போறோம் ! பயத்தில் கிராம மக்கள்

“சார், விடியற்காலையில எழுந்திருச்சு பார்த்தா அப்படியே கறுப்பு கறுப்பா பறந்து வரும். வானவில்லே கலர்மாறி படையெடுத்து வர்ற மாதிரி இருக்கும். நாத்தம் குடலப்பிடுங்கும். வேறென்ன பண்றது? கதவை மூடிக்கிட்டு சகிச்சுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த நாத்தம் எங்களுக்குப் பழக்கமாயிடுச்சு. அந்த மருத்துவக்கழிவு கம்பெனிக்காரங்க மூட மாட்டாங்க; நாங்கதான் எங்க ஊரைக் காலி பண்ணிறலாம்னு இருக்கோம். இல்லேன்னா எங்க ஊர்ல இருக்கற மீதி ஜனங்களும் கிட்னி கெட்டு செத்துருவாங்க" என்று கண்ணீர் வடித்தனர் தொட்டியங்குளம் கிராம மக்கள்.

"விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த திருச்சுழி அருகேயுள்ள அ.முக்குளம் பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனம், மருத்துவக்கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் குடியிருப்பு மற்றும் நீர் நிலைகள் அருகே செயல்படுவதால் சிறுநீரகக்கோளாறு, புற்றுநோய், கர்ப்பப்பை பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்" என்கிறார்கள் மக்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்னை ஒருபக்கம் நீடித்துவரும் நிலையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தற்போது 'தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மெண்ட்' என்ற புதிய நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்துள்ளதாம். இந்நிறுவனம் மின்னணு கழிவுப்பொருள்களை புதைத்து அழிக்கக்கூடியது. இந்த நிறுவனத்தைக் கண்டித்து ஜூலை 19-ம் தேதி அன்று அ.முக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் வகுப்பைப் புறக்கணித்து, இந்த நிறுவனங்களை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இந்த நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரிக்கத் தொட்டியங்குளம் கிராமத்துக்குச் சென்றோம்.

டி.வேப்பங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அ.தொட்டியங்குளம் கிராமத்தில்தான் கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர் என்று கூறப்படுகிறது. தொட்டியங்குளம் பொதுமக்களில் சுமார் 25 சதவிகிதத்தினருக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். 'வாட்ஸ் அப்'. 'ஃபேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், கிட்னி பாதிப்பால் இந்த ஊரில் பலர் இறந்துவிட்டதாகவும்,  எனவே தங்கள் கிராமத்தை மீட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அந்தக் கிராமத்தைவிட்டு மக்கள் அனைவரும் வெளியேறும் அவலம் ஏற்படும் என்றும், தெரிவித்து செய்திகள் பரவின. இதுதொடர்பாகத் தொட்டியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாளிடம் பேசுகையில்,"என் தம்பி சண்முகவேல், கிட்னி பாதிக்கப்பட்டுதான் இறந்துபோனான். அவனுக்கு எந்தக் குறையும் இல்ல. நல்லா ஆரோக்கியமாகத்தான் இருந்தான். திடீர்னு அவன் உடம்பு ஊதி, கன்னம் உப்பிக் காணப்பட்டது. அம்மை போட்டுருக்கும்னு முதலில் சாதாரணமா விட்டுட்டோம். வேப்பிலை, மஞ்சள் அரைத்துத் தடவினோம். அம்மை இறங்கிடும்னு பொறுத்துப் பார்த்தோம். ஆனா, நிலைமை ஒரு கட்டத்துக்குமேல மோசமாயிருச்சு. அதுக்கு அப்புறமாத்தான் மதுரைக்குக் கூட்டிச்சென்று பெரியாஸ்பத்திரில சேர்த்து வைத்தியம் பார்த்தோம். எதுவுமே சரியாகல. அங்கயிருந்து கிளம்பச் சொல்லிட்டாங்க. சொந்தக்காரங்களுக்குச் சொல்லி, மாத்திரை, மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பினாங்க. அதன்பிறகு, கொஞ்ச நாள்லேயே என் தம்பி இறந்துபோய்ட்டான். இனிமே இந்த ஊர்ல இருக்கக் கூடாதுன்னு சொல்லி, தம்பி மனைவி அவங்க நான்கு பொண்ணுங்களையும் கூட்டிக்கிட்டு கோயம்புத்தூருக்குப் போய்ட்டாங்க" என்று தனது சோகக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

மேலும், அமுதா என்பவரிடம் பேசினோம், "என் கணவர் நாகசாமி ரேசன்கடையில வேலை பார்த்தாரு. கிட்னி பாதிச்சுதான் அவர் இறந்துட்டாரு. எவ்ளோ பணம் செலவானாலும், அவரைக் காப்பாத்தணும்னு மதுரை சரவணா ஆஸ்பத்திரில சேர்த்து சிகிச்சை அளித்தோம். மாத்திரை, மருந்து என்று அவரை நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. அப்புறம் நிலைமை மிகவும் மோசமா இருக்கு. டயாலிசிஸ் பண்ணனும்; ரொம்ப செலவாகும்னு சொன்னாங்க... அதையும் பண்ணிட்டு உடம்பு சரியானதும் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டோம். பின்னர், ஒரு வாரத்தில எங்க வீட்டுக்காரர் இறந்துட்டார். முதலில் அம்மை போட்டதாதான் நினைச்சோம். ஆனா, பின்னாடிதான் தெரிஞ்சுது. அவருக்குக் கிட்னி பாதிக்கப்பட்டிருக்குன்னு. ஆஸ்பத்திரிக்குப் போனதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு உண்மையான பாதிப்பு தெரியும். எல்லாத்துக்கும் காரணம், அங்க தெரியற கம்பெனிதான். அந்தக் கம்பெனியில இருந்து வர்ற தூசிதான், எங்க ஊர் தண்ணிய கெடுத்து பெரும்பாலானவங்களுக்குக் கிட்னி பிரச்னை வரவைக்கிறதா சொல்றாங்க" என்றார்.

மேலும், தொட்டியங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் சின்னப்பிள்ளையின் மகன் பழனியிடம் சில விவரங்களைக் கேட்டோம். "எங்க ஊர்ல நிறைய பேருக்கு, கிட்னி பிரச்னை இருக்கு. இதுக்காக நாங்க பல முயற்சிகள் எடுத்துட்டோம். போராட்டம் அது, இதுன்னு எல்லாம் நடத்திப் பார்த்துட்டோம். ஆனா, ஒண்ணும் நடந்தபாடில்லை. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் பல மருத்துவ முகாம்கள் நடத்திருக்கோம். அதிகாரிகள் பலருக்கும் மனு கொடுத்துட்டோம். ஒண்ணுமே வேலைக்கு ஆகல. மருத்துவக்கழிவை எரிக்கிறதால, எங்க ஊருக்கு கிட்னி பிரச்னை வருது. தினமும் லாரி லாரியா மருத்துவக் கழிவை இங்க கொண்டுவந்து எரிக்கிறாங்க. அங்க இருந்து தூசி பறந்துவருது. கறுப்பா தூசிப் படலம் மாதிரி இருக்கு. அங்கிருந்து வெளியாகும் நாத்தமும் மிக மோசமானதா இருக்கும். எவ்வளவு சொன்னாலும் மூட மாட்றாங்க. அரசாங்கத்தில சொல்லி ஏற்கெனவே ஒருமுறை மூட வச்சோம். ஆனா, நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி நான்கு நாள்ல மீண்டும் திறந்துட்டாங்க. நாளுக்கு நாள் அவங்க வேலை அதிகமாகுதே தவிர, குறைஞ்சபாடில்ல. நாங்க அவங்கள தட்டிக்கேக்கவும் பயமா இருக்கு. ஊர்ல இருக்கற மக்கள்ல பலபேரு திருப்பூர், கோயம்புத்தூர்னு கிளம்பிப் போக ஆரம்பிச்சுட்டாங்க. என்ன நடக்கப்போகுதுன்னே தெரியல" என்றார்.

மருத்துவக்கழிவு கம்பெனி

மேலும், தொட்டியங்குளம் கிராமத்தில் கிட்னி பாதிப்புக் குறித்து ஆவணங்களைத் திரட்டிவரும் அதேகிராமத்தைச் சேர்ந்த அழகுராஜா என்பவரிடம் பேசினோம். "எங்க ஊருக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. எல்லோரும் கிட்னி பாதிக்கப்பட்டதாலேயே இறந்துபோறதா தகவல் வந்துகிட்டிருக்கு. இதுவரை 25 பேருக்கு மேல இறந்துட்டாங்க. பல பேர் கிட்னி பாதிக்கப்பட்டு வெளியே சொல்ல சங்கடப்பட்டுக்கிட்டு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பாத்திட்டு வர்றாங்க. எங்க ஊர் நல்லாதான் இருந்துச்சு. கடந்த பத்து வருசமாத்தான் இந்தப் பிரச்னை இருக்கு. ராம்கி என்ற தனியார் நிறுவனம், இந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைத்து மருத்துவக்கழிவுகளை எரிச்சுட்டு வர்றாங்க. அதனால, அந்தக்காற்று எங்க ஊர் முழுக்கப் பரவி, அதனால தண்ணீர் பாதிக்கப்பட்டு, அந்தத் தண்ணீர குடிக்கறதனால கிட்னி பாதிக்கப்பட்டு இறந்து போறாங்க. அரசாங்கம் ஆய்வு செய்து தண்ணீரில் கோளாறு இருக்குன்னு கண்டுபிடிச்சு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மிஷின் வழங்கினாங்க. அந்தத் தண்ணிய நாங்க குடித்தாலும், ஏதாவது, ஒருவகையில தண்ணீர்ல  எரிந்த மருத்துவக் கழிவின் துகள்கள் கலந்துருது. அதனால எங்க ஊர்ல சின்னக்குழந்தைகளுக்குக்கூட கிட்னி பாதிப்பு ஏற்படுது. எங்க ஊர் இளைஞர்களுக்கு பொண்ணு தர மிகவும் யோசிக்கிறாங்க. இங்குள்ள மருத்துவக்கழிவு தொழிற்சாலையை இங்க இருந்து காலிசெய்ய அரசு உடனடியா ஏற்பாடு செய்யணும். இல்லையென்றால், எங்க ஊர் மக்கள் எல்லோரும் இந்த ஊரைவிட்டு வெளியேறும்நிலை ஏற்படும்" என்றார்.

கிராம மக்களின் கிட்னி பாதிப்புக்குக் காரணமாக விளங்கும் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ராம்கி தொழிற்சாலைக்குச் சென்றோம். அங்கிருந்த ஊழியர்கள், 'உயர் அதிகாரிகள் யாரும் இப்போது இல்லை' என்று கூறி, ஆபரேசன் துணை மேலாளர் கோவிந்தனின் செல்போன் நம்பரைக் கொடுத்தனர். அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, "பொதுவாக குப்பைக் கழிவுகளில் மருத்துவக்கழிவுகள் 20% இருக்கும். அதை, இவ்வாறு தனியாகப் பிரித்து எடுத்து அழிக்கவில்லை என்றால், மீதமுள்ள 80% கழிவுகளுடன் கலந்து தொற்றுநிறைந்த மருத்துவக்கழிவாக மாறிவிடும். அதனாலேயே இவ்வாறு அழிக்கப்படுகிறது. வனத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் இணைந்து இந்தப் பாதிப்புகள் குறித்த அறிக்கை கொடுத்தபின் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு மருத்துவக் கழிவுகளை அரசின் விதிமுறைகளின் அடிப்படையிலேயே பிரித்தெடுத்து நவீன இயந்திரங்கள் மூலம் அழித்து வருகிறோம். எத்தனை டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும் என்ற விதியை முறையாகக் கடைப்பிடிக்கிறோம். மேலும், வெளியேற்றப்படும் புகையைக்கூட 30 மீட்டர் அளவுள்ள பெரிய குழாய்கள் மூலம்தான் வெளியேற்றுகிறோம். இதற்கும் அப்பகுதி மக்களின் கிட்னி பாதிப்புக்கும் சம்பந்தமில்லை. சுமார் 10 ஆண்டுகளாக நான் இங்குதான் வேலை செய்கிறேன். என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு எல்லாம சிறுநீரகப் பாதிப்பு பிரச்னை ஏற்படுவதில்லை. வீடுகளே இல்லாத இடங்களில்தான் இந்தத் தொழிற்சாலை இயங்குகிறது. பிறகு எவ்வாறு பாதிப்புகள் ஏற்படும்? ஏற்கெனவே இந்தத் தொழிற்சாலையை நான்கு நாள்கள் மூடிவிட்டனர். பின்னர், அதிகாரிகள் முழுமையாக ஆய்வுசெய்து 'தொழிற்சாலை செயல்படுவதற்கும் பக்கத்துக் கிராம மக்களின் கிட்னி பாதிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று மீண்டும் தொழிற்சாலையை இயக்க அனுமதி அளித்தனர். இதுபோன்ற தொழிற்சாலை தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 இடங்களில் இயங்குகின்றன. அங்கெல்லாம் ஏற்படாத கிட்னி பிரச்னை இங்கு ஏற்படுகிறதா? உண்மையான பிரச்னை என்ன என்பது பற்றி அரசு இந்தக் கிராமத்தில் ஆய்வுசெய்து உதவணும்" என்றார் .

சிறுநீரக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் பேசினோம், "கிட்னி பாதிப்பு என்று எடுத்துக்கொண்டால், பல மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே பாதிப்பின் உண்மையான வீரியத்தைக் கூறமுடியும். சிறுநீரகப் பாதிப்புக்கு முக்கியக் காரணமாக, தண்ணீர் அதிகம் குடிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். தவிர, உடலில் பலவித உப்புச்சத்து நிறைந்த பொருள்களை நாம் சேர்த்துக்கொள்வதாலும் பாதிப்புகள் வர வாய்ப்பு உண்டு. எனவே, சம்பந்தப்பட்ட கிராமத்தில் என்ன பிரச்னை? நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படாதவர்கள் என அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். அவர்கள் எங்கு பணியாற்றுகிறார்கள்? அவர்களின் சுற்றுச்சூழல் என்ன? என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் கிட்னி பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது எனக் கண்டறிய முடியும்" என்றார்.

தொட்டியங்குளம் கிராமத்தில் அரசு முழுமையான ஆய்வு செய்து, மருத்துவக்கழிவு எரிக்கும் தொழிற்சாலையால்தான் கிராம மக்களுக்கு பிரச்னையா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பதைக் கண்டறிந்து முழுமையான தீர்வுகாண முன்வர வேண்டும். இந்தக் கிராமம் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும், இந்தப் பிரச்னையால் பெரிதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டியது இந்த அரசின் கடமை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close